செங்கல்பட்டு உள்பட 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு


செங்கல்பட்டு உள்பட 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
x
தினத்தந்தி 20 Jun 2023 2:26 AM IST (Updated: 20 Jun 2023 5:55 AM IST)
t-max-icont-min-icon

மேலடுக்கு சுழற்சி காரணமாக செங்கல்பட்டு உள்பட 9 மாவட்டங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை,

தென்மேற்கு பருவமழை கேரளாவில் கடந்த 8-ந் தேதி தொடங்கினாலும், தமிழ்நாட்டில் கடந்த 2 தினங்களாக மழை பெய்ய ஆரம்பித்து இருக்கிறது. கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், தற்போது பெய்து வரும் மழையால் வெப்பம் தணிந்து, இதமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில் தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனையொட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் உருவான மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 2 தினங்களாக வட மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து கொண்டிருக்கிறது.

இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 23-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

9 மாவட்டங்களில் கனமழை

அதன்படி, இன்று வட மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும், தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய 9 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

நாளை (புதன்கிழமை) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், நாளை மறுதினமும் (வியாழக்கிழமை), அதற்கு அடுத்த நாளும் (வெள்ளிக்கிழமை) ஓரிரு இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

மழை அளவு

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் சென்னை விமான நிலையம் 16 செ.மீ., தரமணி, ஆலந்தூர் தலா 14 செ.மீ., செம்பரம்பாக்கம் 13 செ.மீ., அண்ணா பல்கலைக்கழகம் 10 செ.மீ., மேற்கு தாம்பரம், ஏ.சி.எஸ்.மருத்துவ கல்லூரி, குன்றத்தூர், டி.ஜி.பி. அலுவலகம், சென்னை நுங்கம்பாக்கம் தலா 9 செ.மீ., கொரட்டூர், எம்.ஜி.ஆர்.நகர் தலா 8 செ.மீ., கே.வி.கே.காட்டுக்குப்பம், பூந்தமல்லி, தாம்பரம், சத்யபாமா பல்கலைக்கழகம் தலா 7 செ.மீ., அயனாவரம், சென்னை கலெக்டர் அலுவலகம், வில்லிவாக்கம் தலா 6 செ.மீ. உள்பட சில இடங்களில் மழை பெய்துள்ளது.


Related Tags :
Next Story