மாவட்டத்தில்இன்றும், நாளையும் லேசான மழைக்கு வாய்ப்பு
நாமக்கல் மாவட்டத்தில் இன்றும், நாளையும் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மழைக்கு வாய்ப்பு
நாமக்கல் மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) முதல் 3 நாட்கள் நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அடுத்த 3 நாட்கள் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று 2 மி.மீட்டரும், நாளை (வியாழக்கிழமை) 4 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளைமறுநாள் (வெள்ளிக்கிழமை) மழைக்கு வாய்ப்பு இல்லை. வெப்பநிலையை பொறுத்த வரையில் குறைந்தபட்சமாக 75.2 டிகிரியாகவும், அதிகபட்சமாக 96.8 டிகிரியாகவும் இருக்கும்.
காற்று மணிக்கு முறையே 4,6,4 கி.மீ.வேகத்தில் தென்கிழக்கு திசையில் இருந்து வீசும். காற்றின் ஈரப்பதம் குறைந்தபட்சமாக 30 சதவீதமாகவும், அதிகபட்சமாக 80 சதவீதமாகவும் இருக்கும்.
கறவை மாடுகள்
சிறப்பு வானிலையை பொறுத்த வரையில் கோடை காலங்களில் கறவை மாடுகள் அதிக வெப்பநிலை காரணமாக அயற்சிக்கு ஆளாகின்றன. அதிக வெப்பநிலை காரணமாக கறவை மாடுகளின் கொழுப்பற்ற திடப்பொருட்களின் அளவு குறைவாக இருக்கும். இதனால் விற்பனை செய்யப்படும் பாலுக்கு விலை குறைவாக கிடைக்கும்.
இப்பிரச்சினைக்கு தீர்வு காண வெயில் நேரங்களில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடக்கூடாது. குளிர்ந்த நேரங்களில் கறவை மாடுகளுக்கு போதுமான அளவு அடர்தீவனம் கொடுக்க வேண்டும். நாள் முழுவதும் நல்ல தரமான குடிநீர் கிடைக்குமாறு செய்ய வேண்டும். அதிகாலை பொழுதில் கறவை மாடுகள் மற்றும் எருமைகளில் சினை பருவ அறிகுறிகளை உற்று கவனித்து, சினை ஊசியை போட வேண்டும்.
இந்த வெப்ப காலத்தில் நாட்டுக்கோழிகள் ஒன்றையொன்று கொத்தி கொண்டும், தீவனம் எடுக்காமலும் வளர்ச்சி குறைந்தும் காணப்படுவது இயல்பு. இடவசதியை அதிகரித்து தீவனத்தில், நார்ச்சத்து மற்றும் தாவர எண்ணெய் அதிகரித்து கொடுப்பதால் கோழிகளின் இறப்பையும், வளர்ச்சி குறைபாட்டையும் நன்கு குறைக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.