3 நாட்கள் லேசான மழைக்கு வாய்ப்பு


3 நாட்கள் லேசான மழைக்கு வாய்ப்பு
x

நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் 3 நாட்கள் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நாமக்கல்

மழைக்கு வாய்ப்பு

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) முதல் 3 நாட்கள் நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அடுத்த 3 நாட்கள் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று 4 மி.மீட்டரும், நாளை (வியாழக்கிழமை) 10 மி.மீட்டரும், நாளைமறுநாள் (வெள்ளிக்கிழமை) 6 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலையை பொறுத்த வரையில் அதிகபட்சமாக 98.6 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 71.6 டிகிரியாகவும் இருக்கும்.

காற்று மணிக்கு முறையே 10 மற்றும் 12 கி.மீ. வேகத்தில் தென்மேற்கு திசையில் இருந்து வீசும். காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக 80 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக 30 சதவீதமாகவும் இருக்கும்.

வேளாண் காடுகள்

சிறப்பு வானிலையை பொறுத்த வரையில் ஆடுகளுக்கு தீவன தேவையை பூர்த்தி செய்வதற்காக தென்மேற்கு பருவமழை காலத்தில் வேளாண் காடுகளை உருவாக்க, மரக்கன்றுகளை இந்த தருணத்தில் நடலாம். குறிப்பாக வேல், வாகை, கல்யாண முருங்கை, ஆலமரம், கொடுக்காபுளி, அகத்தி, முருங்கை போன்ற தீவன மரங்களை நடலாம்.

மர வரிசைகளுக்கு இடையே அதிக இடைவெளி கொடுப்பது நல்லது. ஆடுகளின் தீவன தேவையில், பாதியளவு மர இலைகளை கொடுப்பதால், புற்களை மட்டும் உண்ணும் ஆடுகளை விட, உற்பத்தி திறன் மற்றும் சத்து பயன்பாடு அதிகம் என ஆராய்ச்சிகள் மூலம் தெரியவந்து உள்ளது. மரவரிசைகளுக்கு இடையே பின் நாளில் புற்கள், கொழுக்கட்டை, முயல் மசால், வேலி மசால், கொள்ளு, தட்டைபயிறு போன்றவற்றை பயிரிடலாம்.

ஆடுகளை வேளாண் காடுகளில் நேரடியாக மேய்ச்சலுக்கு பயன்படுத்தும்போது, சிறு பகுதிகளாக பிரித்து கொண்டு சுழற்சி முறையில் மேயவிட வேண்டும். வேளாண் காடுகளில் குறைந்தது 30 சதவீதம் பயறுவகை பயிர்கள் வளர்ப்பதால், அவற்றை மேயும் ஆடுகளுக்கு போதிய அளவு புரதம் மற்றும் கால்சியம் சத்துக்கள் கிடைக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story