3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் 3 நாட்கள் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மழைக்கு வாய்ப்பு
நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் 3 நாட்கள் நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அடுத்த 3 நாட்கள் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். இன்றும், நாளையும் (வியாழக்கிழமை) 5 மி.மீட்டரும், நாளைமறுநாள் (வெள்ளிக்கிழமை) 4 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலையை பொறுத்த வரையில் அதிகபட்சமாக 91.4 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 68 டிகிரியாகவும் இருக்கும்.
காற்று மணிக்கு 14 கி.மீ.வேகத்தில் தென்மேற்கு திசையில் இருந்து வீசும். காற்றின் ஈரப்பதம் குறைந்தபட்சமாக 40 சதவீதமாகவும், அதிகபட்சமாக 90 சதவீதமாகவும் இருக்கும்.
வேளாண் காடுகள்
சிறப்பு வானிலையை பொறுத்த வரையில், ஆடுகளுக்கு தீவன தேவையை பூர்த்தி செய்ய தென்மேற்கு பருவமழை காலத்தில் வேளாண் காடுகளை உருவாக்க, இந்த தருணத்தில் மரக்கன்றுகளை நடலாம். குறிப்பாக வாய்க்கால் வரப்புகளில் வேல், வாகை, கல்யாண முருங்கை, ஆலமரம், கிளரிசிடியா, கொடுக்காபுளி, அகத்தி, முருங்கை போன்ற தீவன மரங்களை நடலாம்.
மரவரிசைகளுக்கு இடையில் பின்னாலில் புற்கள் மற்றும் பயிறு வகை தீவனங்களான கினியா, கொழுக்கட்டை, முயல் மசால், கொள்ளு, தட்டை பயிறு போன்றவற்றை பயிரிடலாம். ஆடுகளை வேளாண் காடுகளில் நேரடியாக மேய்ச்சலுக்கு விடும்போது, சிறு பகுதிகளாக பிரித்து கொண்டு சுழற்சி முறையில் மேய விட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.