தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு


தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு
x

தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு அநேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், மேற்குத்தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டில் கோடை வெயிலுக்கு இதமாக சில இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது. இதனால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்து வருகிறது. கடந்த வாரத்தில் பெரும்பாலான இடங்களில் வெப்பம் 100 டிகிரியை கடந்து பதிவான நிலையில், கடந்த 3 நாட்களாக கரூர், ஈரோட்டில் மட்டுமே வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகி வருகிறது.

இதன் தொடர்ச்சியாக தென்னிந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்குத்திசை காற்றும், மேற்குத் திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதால், தமிழ்நாட்டில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் 4 நாட்களுக்கு அநேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், மேற்குத்தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வுமையம் அறிவித்து இருக்கிறது.

அநேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு

அதன்படி இன்று (சனிக்கிழமை) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 30 கி.மீ. முதல் 40 கி.மீ. வரையிலான வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழையும், நீலகிரி, கோவை, ஈரோடு, திண்டுக்கல், தேனி, தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

நாளை (ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், நீலகிரி, ஈரோடு, கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

கனமழை

நாளை மறுதினம் (திங்கட்கிழமை) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழையும், நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாமக்கல், சேலம், தர்மபுரி மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

அதற்கு மறுநாள் (செவ்வாய்க்கிழமை) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

மழை அளவு

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் தமிழ்நாட்டில், கொடைக்கானலில் 11 செ.மீ., மழையும், ஈச்சன்விடுதியில் 5 செ.மீ., மழையும், சோத்துப்பாறையில் 4 செ.மீ., மழையும், மஞ்சளாறு, கயத்தாறு, பெரம்பலூர், கடம்பூர், ராமநதி அணைப்பிரிவு, மாஞ்சோலை ஆகிய பகுதிகளில் தலா 3 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.


Next Story