20- ம் தேதியில் இருந்து தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு
நவம்பர் 21, 22 தேதிகளில் தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் மீண்டும் தீவிரம் அடைய இருக்கிறது. ஏற்கனவே இம்மாதம் முதல் வாரத்தில் மழை வெளுத்து வாங்கிய நிலையில், அதன் பின்னர் சிறிய இடைவெளி கொடுத்தது. மீண்டும் கடந்த 10-ந்தேதியில் இருந்து மாநிலம் முழுவதும் பரவலாக மழை கொட்டியது. இதனால் பல இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்தது.
அதன் தொடர்ச்சியாக கடந்த 3 நாட்களாக தமிழகத்தில் மழை சற்று குறைந்து இருந்தாலும், தென் மாவட்டங்களில் மட்டும் சில இடங்களில் கன மழையும், மற்ற பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி, மீண்டும் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையும் என்று கூறப்பட்டது. ஆனால் ஒரு நாள் தாமதமாக நேற்று வங்கக்கடலில் அந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதிகளில் உருவாகி இருக்கும் இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை (சனிக்கிழமை) தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் இது 22-ந்தேதிக்கு (செவ்வாய்க்கிழமை) பிறகு வட மேற்கு திசையில் தமிழ்நாடு-புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது.
தற்போது வரை தாழ்வு மண்டலமாகவே கடக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டு இருந்தாலும், புயலாக மாறுவதற்கான வாய்ப்பு இருக்கிறதா? என்பதை ஆய்வு மையம் உன்னிப்பாக கவனித்து வருகிறது.
இதன் காரணமாக, தமிழகத்தில் மீண்டும் மிதமானது முதல் மிக கனமழை வரை பல்வேறு இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டு இருக்கிறது. குறிப்பாக இன்று (வெள்ளிக்கிழமை) தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், நாளை கடலோர தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் சில இடங்களிலும், தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
அதனைத்தொடர்ந்து 20-ந்தேதி (நாளை மறுதினம்) தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் அனேக இடங்களிலும், உள் மாவட்டங்களில் சில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
இதேபோல் வருகிற 21-ந்தேதி (திங்கட்கிழமை) தமிழகத்தின் வட மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களிலும், தென் மாவட்டங்களில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது. மிக கனமழை பெய்யக்கூடிய 3 மாவட்டங்களுக்கு நிர்வாக ரீதியாக ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் அதனையொட்டிய அந்தமான் கடல்பகுதிகள், மத்திய கிழக்கு, தென்மேற்கு வங்கக்கடல், இலங்கை கடலோரப்பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 கி.மீ. முதல் 55 கி.மீ. வரையிலான வேகத்தில் காற்று வீசக்கூடும்.
அதேபோல், நாளை மறுதினமும், அதற்கு அடுத்தநாளும் தமிழகம், இலங்கை கடலோரப்பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். எனவே மேற்சொன்ன பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்த நிலையில் கடலூர் மீன்வளத்துறை உதவி இயக்குனர் சுப்பிரமணியன் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளாா். அதில் அவா் கூறியிருப்பதாவது:-
புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் பைபர், விசை படகுகள் மூலம் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். மேலும் ஏற்கனவே கடலில் தங்கி மீன் பிடித்துக் கொண்டிருக்கும் விசைப்படகு மீனவர்களும், அருகில் உள்ள துறைமுகங்களுக்கு பாதுகாப்பாக கரை திரும்ப அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இது தவிர நாளை (சனிக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மீனவர்கள் தங்களது படகு மற்றும் மீன்பிடி வலைகள், இதர உபகரணங்களை, பாதுகாப்பான இடங்களில் வைப்பதோடு, அரசுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைதளத்தில் கூறி இருப்பதாவது:-
காற்றழுத்த தாழ்வு பகுதிக்கும், வறண்ட காற்றுக்கும் இடையிலான மோதல் தொடங்கிவிட்டது. நீங்கள் இந்த இமேஜில் பார்ப்பது போல வறண்ட காற்றழுத்த தாழ்வு பகுதியை அழிப்பதற்கு முன்பாக, ஈரமான காற்று வடக்கு தமிழ்நாட்டை நோக்கி நகர்கிறது. அதேபோல் காற்றழுத்த தாழ்வு பகுதியும் எங்கேயும் நகராமல் அப்படியே இருக்கிறது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நல்ல மழையை நாம் எதிர்பார்க்கலாம். வடக்கு தமிழ்நாட்டில் வரும் 20ம் தேதியில் இருந்து நல்ல மழை பெய்யும். 20ம் தேதியில் இருந்து தென் தமிழ்நாட்டில் லேசான மழையே பெய்யும். இன்று கன்னியாகுமரியில் ஆங்காங்கே சில இடங்களில் மழை பெய்யும். அதை தவிர மற்ற இடங்களில் வறண்டும், பனி மூட்டமாகவும் காணப்படும், என்று தமிழ்நாடு வெதர்மன் பிரதீப் ஜான் தெரிவித்து உள்ளார்.