மதுரை- தேனி ரோடு முடக்குச்சாலையில் போக்குவரத்து மாற்றம்


மதுரை- தேனி ரோடு முடக்குச்சாலையில்   போக்குவரத்து மாற்றம்
x

மதுரை- தேனி ரோடு முடக்குச்சாலையில் மேம்பால பணிகள் காரணமாக வாகன போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

மதுரை


மதுரை- தேனி ரோடு முடக்குச்சாலையில் மேம்பால பணிகள் காரணமாக வாகன போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து, மதுரை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மேம்பால பணிகள்

மதுரை-தேனி ரோடு முடக்குச்சாலை -எச்.எம்.எஸ்.காலனி வரை 1190 மீட்டருக்கு மேம்பாலம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக முடக்குச்சாலை சந்திப்பு முதல் டி.வி.எஸ். ரப்பர் கம்பெனி வரையிலான சாலையினை தற்காலிகமாக முற்றிலும் தடை செய்ய வேண்டிய சூழல் உள்ளது.

இந்தநிலையில் மதுரை நகரில் இருந்து முடக்குச்சாலை, தேனி மெயின் ரோடு, டி.வி.எஸ். ரப்பர் கம்பெனி வழியாக தேனி மெயின் ரோடு மூலம் வெளியூர் சென்ற பஸ்கள், கனரக வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களும் முடக்குச் சாலை சந்திப்பு முதல் டி.வி.எஸ். ரப்பர் கம்பெனி வரை செல்ல தடை செய்யப்படுகிறது.

முடக்குச் சாலை சந்திப்பு வழியாக டி.வி.எஸ். ரப்பர் கம்பெனி நோக்கி சென்ற இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, இலகுரக வாகனங்களின் வழித்தடங்கள் 24-ந்தேதி (இன்று) முதல் பாலம் கட்டுமானப்பணி முடியும் வரை மாற்று வழியில் செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.

எனவே, மதுரை நகரில் இருந்து வரும் பஸ்கள், கனரக வாகனங்கள் அனைத்தும் டி.வி.எஸ். ரப்பர் கம்பெனி வழியாக தேனி சாலை வழியாக செல்ல தடை செய்யப்படுகிறது. 24-ந்தேதி முதல் இந்த வாகனங்கள் முடக்குச்சாலை, கோச்சடை, துவரிமான் நான்குவழிச்சாலை வழியாக மட்டுமே செல்ல வேண்டும்.

மதுரை நகரில் இருந்து வெளியூர் செல்லும் 2, 3 சக்கர வாகனங்கள், கார், மினிவேன் போன்ற இலகுரக வாகன பயணிகள், வாகனங்கள் மற்றும் தடம் எண் 21 கொண்ட அரசு நகர பஸ்கள் மட்டும் காளவாசல் சந்திப்பு, சம்மட்டிபுரம், டி.வி.எஸ். ரப்பர் கம்பெனி, எச்.எம்.எஸ். காலனி சந்திப்பு வழியாக விராட்டிபத்து மற்றும் அச்சம்பத்து வழியாக செல்லலாம்.

ஒத்துழைப்பு

நாகமலை புதுக்கோட்டை நான்கு வழிச்சாலையில் இருந்து அச்சம்பத்து வழியாக நகருக்கு வரும் இரு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், கார், மினி வேன் போன்ற இலகுரக வாகனங்கள் வழக்கம்போல் அச்சம்பத்து, விராட்டிபத்து, டோக் நகர் திரும்பி கோச்சடை, முடக்குச்சாலை வழியாக நகருக்கு செல்ல வேண்டும். நாகமலை புதுக்கோட்டை நான்கு வழிச்சாலையில் இருந்து அச்சம்பத்து வழியாக நகருக்குள் வரும் பஸ்கள், கனரக வாகனங்கள் வர விதிக்கப்பட்ட தடை தொடர்கிறது.

இந்த வாகனங்கள் நான்கு வழிச்சாலை துவரிமான், கோச்சடை, முடக்கு சாலை வழியாக நகருக்குள் வர வேண்டும். இதில் அரசு மினி பஸ்கள் மட்டும் விராட்டிபத்து, அச்சம்பத்து ஆகிய பகுதியில் இருந்து டோக் நகர் வழியாக பெரியார் பஸ் நிலையத்திற்கு செல்லலாம். எனவே, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அனைவரும் இந்த வாகன போக்குவரத்து மாற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story