பொறியாளரை மாற்ற வலியுறுத்தி அ.தி.மு.க., பா.ம.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு
மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் பொறியாளரை மாற்ற வலியுறுத்தி அ.தி.மு.க., பா.ம.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
ஆரணி
மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் பொறியாளரை மாற்ற வலியுறுத்தி அ.தி.மு.க., பா.ம.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
ஒன்றியக்குழு கூட்டம்
ஆரணி கோட்டை வேம்புலி அம்மன் கோவில் அருகில் அமைந்துள்ள மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது. தலைவர் பச்சையம்மாள் சீனிவாசன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஆ.வேலாயுதம் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் திலகவதி வரவேற்றார்.
கூட்டத்தில் உறுப்பினர்கள் ஏழுமலை (பா.ம.க.), அரையாளம் எம்.வேலு (அ.தி.மு.க.) பேசுகையில், ஒன்றிய பொறியாளர் சிவக்குமார் ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கு எந்தவித தகவலும் தெரிவிப்பதில்லை,
ஒப்பந்த பணிகள் வந்தாலும் அவற்றை உடனடியாக ஊராட்சி மன்ற தலைவர்களுக்கோ, ஒப்பந்ததாரர்களுக்கு தகவல் தெரிவித்து பணிகளை முடிக்கிறார்.
உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு அலுவலகத்தில் எந்த மரியாதையும் இல்லை. இது சம்பந்தமாக கடந்த கூட்டத்திலேயே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசியதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவித்தார்.
ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே அவரை உடனடியாக மாற்ற வேண்டும் என்றனர்.
வெளிநடப்பு
அதற்கு அனைத்து உறுப்பினர்களுமே கண்டிப்பாக அதற்கு நாங்கள் அனைவருமே முழு ஒத்துழைப்பு தருகிறோம் என பேசினார்கள்.
ஆனால் இதற்கு ஆணையாளர் சரிவர பதில் அளிக்காததால் அ.தி.மு.க.வை சேர்ந்த அரையாளம் எம்.வேலு, எம்.டி.வசந்தராஜ், கணேஷ், ஏழுமலை மற்றும் பா.ம.க.வை சேர்ந்த ஏழுமலை, கீதா சரவணன் ஆகிய 6 பேரும் வெளிநடப்பு செய்தனர்.
அப்போது தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் எஸ்.மோகன், துரை மாமது ஆகியோர் வெளிநடப்பு செய்தவர்களிடம் சமாதானம் பேசி மன்ற கூட்டத்திற்கு மீண்டும் அழைத்து வந்தனர்.
தீர்மானம்
பின்னர் பொறியாளரை மாற்ற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்படும் என தெரிவித்ததின் பேரில் சமாதானம் அடைந்தனர். இதையடுத்து கூட்டத்தில் பொறியாளரை மாற்ற வலியுறுத்தி தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து கூட்டத்தில் உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினார்கள்.