போலீஸ் இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்


போலீஸ் இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
x

போலீஸ் இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.

திருச்சி

பாலியல் புகார்

திருச்சி காந்தி மார்க்கெட் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சுகுமாறன். கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் காந்திமார்க்கெட் போலீஸ் நிலையத்தில் இவர் பணியாற்றி வருகிறார். தனது அதிரடி நடவடிக்கையால் வியாபாரிகள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் நற்பெயருடன் விளங்கி வந்தார்.

இந்தநிலையில் திருச்சி காந்தி மார்க்கெட் கிருஷ்ணர் கோவில் தெருவில் வசிக்கும் 27 வயது பெண் நேற்று முன்தினம், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், வழக்கு விசாரணைக்காக சென்ற தனக்கு, காந்திமார்க்கெட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுமாறன் செல்போன் மூலம் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிவித்து இருந்தார்.

காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

இதுகுறித்து உரிய விசாரணை நடத்த மாநகர போலீஸ் கமிஷனருக்கு கலெக்டர் பரிந்துரை செய்தார். இதுதொடர்பாக மாநகர துணை போலீஸ் கமிஷனர் தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுமாறனை நேற்று முன்தினம் இரவோடு, இரவாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி போலீஸ் கமிஷனர் சத்தியபிரியா உத்தரவிட்டார்.

இதற்கிடையே இன்ஸ்பெக்டர் மீது பாலியல் குற்றம்சாட்டிய பெண், இன்ஸ்பெக்டரை சிங்கம் என்று வர்ணித்தும், அவரை 'கரெக்ட்' செய்வது எப்படி என்றும் பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இது காந்திமார்க்கெட் வியாபாரிகள் மற்றும் அந்த பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடும் நடவடிக்கை

இது குறித்து மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியபிரியாவிடம் கேட்டபோது, அந்த பெண் கொடுத்த புகார் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. புகாருக்கு ஆளான இன்ஸ்பெக்டர் தற்போது காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். விசாரணை அறிக்கை முழுமையாக வந்தபிறகு தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


Next Story