மாற்றுத்திறனாளியை மதுபாட்டிலால் குத்தியவர் போலீசில் சரண்


மாற்றுத்திறனாளியை மதுபாட்டிலால் குத்தியவர் போலீசில் சரண்
x

யார் பலசாலி? என்ற போட்டியில் மாற்றுத்திறனாளியை மதுபாட்டிலால் குத்தியவர் போலீசில் சரண் அடைந்தார். படுகாயம் அடைந்த மாற்றுத்திறனாளிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பெரம்பலூர்

மதுபாட்டிலை உடைத்து குத்தினார்

பெரம்பலூர் புறநகர் அரணாரை பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து மகன் லட்சுமணன்(வயது 30). மாற்றுத்திறனாளியான இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நெடுங்குடியான் கிராமத்தை சேர்ந்தவர் சலமணி மகன் ராஜா(28). கூலித்தொழிலாளி. லட்சுமணன், ராஜா இருவரும் பெரம்பலூர்-ஆத்தூர் சாலையிலுள்ள டாஸ்மாக் கடையில் மதுபானம் வாங்கி குடித்துவிட்டு கடைக்கு அருகில் மதுபோதையில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே யார் பலசாலி? (கெத்து) என்பதை காண்பிப்பதற்காக ராஜா தனது கையில் வைத்திருந்த மதுபான பாட்டிலை உடைத்து மாற்றுத்திறனாளி லட்சுமணனின் இடது காது மற்றும் தாடையில் குத்தினார்.

போலீசில் சரண்

பின்பு அங்கிருந்து நடந்துசென்று பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் நடந்த சம்பவத்தை கூறி சரணடைந்தார். உடனே போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்தனர். அங்கு ரத்தம் சொட்டிய நிலையில் பலத்த காயங்களுடன் கிடந்த லெட்சுமணனை போலீசார் மீட்டு பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story