சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை


சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை
x

சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. போலீசார் விரைவில் தாக்கல் செய்ய உள்ளனர்.

மதுரை

சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. போலீசார் விரைவில் தாக்கல் செய்ய உள்ளனர்.

இரட்டைக்கொலை வழக்கு

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்தவர் ஜெயராஜ். இவர் அதே பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்தார். கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா ஊரடங்கு விதிகளை பின்பற்றவில்லை என்று கூறி, இவரையும், இவரது மகன் பென்னிக்சையும் சாத்தான்குளம் போலீசார் தங்களது வாகனத்தில் ஏற்றி, போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவர்களை கடுமையாக தாக்கியதில் படுகாயம் அடைந்தனர். பின்னர் கோவில்பட்டி சிறையில் அடைத்தனர். அங்கு காயங்களால் அவதிப்பட்ட அவர்களை சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர்.

கோர்ட்டில் விசாரணை

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து சி.பி.ஐ. போலீசார் விசாரிக்க உத்தரவிடப்பட்டது. அதன்பேரில் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய அப்போதைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 9 போலீசார் கைதாகி, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. போலீசார் தாக்கல் செய்தனர். அதில் மொத்தம் 105 சாட்சிகள் சேர்க்கப்பட்டு இருந்தன. ஜெயராஜ், பென்னிக்ஸ் தாக்கப்பட்டது சம்பந்தமாக சாட்சிகளிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்தநிலையில் இந்த வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டு வருகிறது.

கூடுதல் குற்றப்பத்திரிகை

இன்னும் சில நாட்களில் இந்த கூடுதல் குற்றப்பத்திரிகை கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த கூடுதல் குற்றப்பத்திரிகையில் தான் முக்கிய சாட்சியாக பலர் சேர்க்கப்பட்டு உள்ளனர். எனவே இந்த வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின்னர், சாட்சிகளின் விசாரணை தீவிரமடையும் என்று கோர்ட்டு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



Next Story