அதிகபட்ச மின் பயன்பாட்டு நேரம் என கட்டணம் விதிப்பது ஆபத்தானது; பாலகிருஷ்ணன் பேட்டி


அதிகபட்ச மின் பயன்பாட்டு நேரம் என கட்டணம் விதிப்பது ஆபத்தானது; பாலகிருஷ்ணன் பேட்டி
x
தினத்தந்தி 27 Jun 2023 12:40 AM IST (Updated: 27 Jun 2023 11:55 AM IST)
t-max-icont-min-icon

அதிகபட்ச மின் பயன்பாட்டு நேரம் என கட்டணம் விதிப்பது ஆபத்தானது என்று பாலகிருஷ்ணன் கூறினார்.

அரியலூர்

ஜெயங்கொண்டம்:

பயிர் காப்பீடு

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே சின்னவளையம் கிராமத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், கட்சி நிர்வாகிகளை ஜெயங்கொண்டத்தில் சந்தித்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த ஆண்டு மழை எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்றால், தமிழக அரசு கர்நாடக அரசுடன் பேசி காவிரியில் இருந்து பற்றாக்குறை காலங்களில் பகிர்வு அடிப்படையில் நமக்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் பெறுவதற்கான நடவடிக்கையை தமிழக அரசு இப்போது இருந்தே மேற்கொள்ள வேண்டும். கடந்த 2 ஆண்டுகளாக குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு இல்லாத நிலையில், தற்போது நிச்சயமற்ற நிலைமை உள்ளது. பயிர் காப்பீட்டு நிறுவனங்கள் காப்பீடு செய்ய முன்வராத பட்சத்தில் தமிழக அரசு தனது சொந்த நிதியை ஒதுக்கி இழப்பீட்டை ஈடு செய்யக்கூடிய அளவிற்கு பயிர் காப்பீட்டை வழங்க வேண்டும். அதிகபட்ச மின் பயன்பாட்டு நேரம் என ஒரு கட்டணம் விதிப்பது மிக மிக ஆபத்து. மின் கட்டணம் உயர்ந்தால், அத்தியாவசிய பொருட்கள் விலையும் உயரும்.

இடுபொருட்கள் விலை உயர்வு

விவசாய விளை பொருட்களுக்கு இரட்டிப்பு விலை உயர்த்துவோம் என்று பிரதமர் மோடி கூறியிருந்த நிலையில், இடுபொருட்கள் விலை 25, 30 சதவீதம் உயர்ந்துள்ளது. ஆனால் நெல்லுக்கான ஆதார விலையை 5 சதவீதம் மட்டுமே மத்திய அரசு உயர்த்தி உள்ளது. இதனால் பல மாவட்டங்களில் நெல் சாகுபடி பரப்பளவு குறைந்து வருகிறது. இது உணவு பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பிரச்சினை. இதில் அரசு மெத்தனமாக உள்ளது.

பா.ஜ.க.வின் 9 ஆண்டு சாதனைகள் என்பது இந்திய மக்களை எவ்வளவு கொன்று குவிக்க முடியுமோ? அவ்வளவு கொன்று குவித்துள்ளனர். அதுதான் அவர்களது சாதனை. இப்பகுதியில் நிலக்கரி திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு அத்திட்டம் நிறைவேறாமல், மீண்டும் நிலங்களை விவசாயிகளிடமே ஒப்படைக்க தாமதப்படுத்துவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதில் உடனடியாக தமிழக அரசு தலையிட்டு நில உரிமையாளரிடம் நிலத்திற்கான பட்டாவினை ஒப்படைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது கட்சியின் மாவட்ட செயலாளர் இளங்கோவன் உள்பட நிர்வாகிகள் உடனிருந்தனர்.


Next Story