வீட்டு இணைப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்
வீட்டு இணைப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்
பொள்ளாச்சி
பாதாள சாக்கடை திட்டத்தில் வீட்டு இணைப்புக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக குறைதீர்க்கும் முகாமில் பொதுமக்கள் புகார் அளித்தனர்.
குறைதீர்க்கும் முகாம்
பொள்ளாச்சி நகராட்சி சார்பில் சி.டி.சி. காலனியில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதற்கு தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். பின்னர் பொதுமக்கள் பேசும்போது, குடியிருப்புகளுக்கு மத்தியில் பொதுக்கழிப்பிடம் கட்ட கூடாது. பாதாள சாக்கடை திட்ட ஆள்இறங்கு குழிகளை தரமாக அமைக்க வேண்டும். வீட்டு இணைப்புக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர். சேரன் காலனி பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்தவும், சமுதாய கூடம் கட்டி கொடுக்கவும் வேண்டும் என்றனர்.
கட்டணம் எவ்வளவு?
தொடர்ந்து ஆணையாளர் தாணுமூர்த்தி கூறுகையில், பாதாள சாக்கடை திட்டத்தில் 20 ஆயிரம் வீட்டு இணைப்பு கொடுக்க வேண்டும். தற்போது வரை 5 ஆயிரம் பேர் இணைப்பு பெற்றனர். டெபாசிட் தொகையில் இருந்து 20 அடிக்கு குழாய் இணைப்பு, 2 சேம்பர் நகராட்சி மூலம் அமைத்து கொடுக்கப்படும். அதன்பிறகு ஒரு அடிக்கு ரூ.250, சேம்பருக்கு ரூ.1,500 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. நகராட்சி நிர்ணயம் செய்த தொகையை விட கூடுதலாக கொடுக்க வேண்டியதில்லை என்றார்.
நகராட்சி தலைவர் கூறும்போது, முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின்படி வார்டு வாரியாக குறைதீர்க்கும் முகாம் நடத்தப்படுகிறது. இதேபோன்று ஏதாவது ஒரு பொது இடத்தில் வாரம் ஒரு முறை 3 வார்டுகள் சேர்த்து குறைதீர்க்கும் முகாம் நடத்தப்படும். அதில் பொதுமக்கள் தெரிவிக்கும் குறைகள் உடனடியாக சரிசெய்யப்படும் என்றார். இதில் துணை தலைவர் கவுதமன் மற்றும் கவுன்சிலர்கள், நகராட்சி அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.