ஆனந்தவல்லியம்மன்-சோமநாதர் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம்
மானாமதுரை ஆனந்தவல்லியம்மன்-சோமநாதர் கோவில் சித்திரை திருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்றது.
மானாமதுரை
மானாமதுரை ஆனந்தவல்லியம்மன்-சோமநாதர் கோவில் சித்திரை திருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்றது.
சித்திரை திருவிழா தேரோட்டம்
மானாமதுரையில் பிரசித்தி பெற்ற ஆனந்தவல்லியம்மன்-சோமநாதர் கோவில் உள்ளது. சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்குட்பட்ட இக்கோவிலில் இந்தாண்டு சித்திரை திருவிழா கடந்த மாதம் 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் இரவு சுவாமி மற்றும் அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். நேற்று முன்தினம் சுவாமி மற்றும் அம்பாளுக்கு திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 9-வது நாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக கோவில் முன்பு அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி மற்றும் அம்பாள் அதிகாலையில் எழுந்தருளினர். தேருக்கு முன்பாக விநாயகர் மற்றும் முருகன் ஆகிய சுவாமிகள் சிறிய சப்பரத்தில் எழுந்தருளினர். அதற்கு பின்னால் உள்ள தேரில் சுவாமியும், அம்பாளும், சிறிய தேரில் அம்பாளும் எழுந்தருளினர். தொடர்ந்து காலை 9.20 மணிக்கு சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டு தேரோட்டம் நடைபெற்றது. இதையடுத்து அங்கு திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
நிலாச்சோறு உற்சவம்
தேர் கோவிலை சுற்றி நான்கு ரத வீதிகள் வழியாக வந்து நிலையை வந்தடைந்தது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் பூக்கள், காய்கறிகள் ஆகியவற்றை தூவி வழிபாடு செய்தனர். தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. தேரோட்ட விழாவில் மானாமதுரை மற்றும் அதன் சுற்று வட்டார கிராம மக்களும், மானாமதுரை நகர் மன்ற தலைவர் மாரியப்பன ்கென்னடி, துணைத்தலைவர் பாலசுந்தரம், கவுன்சிலர்கள் சண்முகபிரியா, சத்யா மற்றும் யூனியன் தலைவர் லதாஅண்ணாத்துரை உள்பட பலர் கலந்துகொண்டனர்
திருவிழாவையொட்டி நாளை காலை 7 மணி முதல் 7.25 மணிக்குள் வைகையாற்றில் வீர அழகர் இறங்கும் நிகழ்ச்சியும், 6-ந்தேதி வைகையாற்றில் நிலாச்சோறு உற்சவம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணிமதுராந்தகி நாச்சியார் தலைமையில் தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் உத்தரவின் பேரில் மானாமதுரை போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.