விடாமல் பெய்த கனமழை: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயண பெருமாள் கோவில் தேரோட்டம் பாதியில் நிறுத்தம்-இன்று மீண்டும் நடக்கிறது


விடாமல் பெய்த கனமழை: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயண பெருமாள் கோவில் தேரோட்டம் பாதியில் நிறுத்தம்-இன்று மீண்டும் நடக்கிறது
x
தினத்தந்தி 5 May 2023 12:15 AM IST (Updated: 5 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விடாமல் பெய்த கனமழையால் திருக்கோஷ்டியூர் சவுமியநாராயண பெருமாள் கோவில் தேரோட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. இன்று மீண்டும் தேர் வடம்பிடித்து இழுக்கப்பட்டு நிலையை அடைகிறது.

சிவகங்கை

திருப்பத்தூர்

விடாமல் பெய்த கனமழையால் திருக்கோஷ்டியூர் சவுமியநாராயண பெருமாள் கோவில் தேரோட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. இன்று மீண்டும் தேர் வடம்பிடித்து இழுக்கப்பட்டு நிலையை அடைகிறது.

சித்திரை திருவிழா

திருப்பத்தூர் அருகே உள்ள திருக்கோஷ்டியூரில் சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்குட்பட்ட பிரசித்தி பெற்ற சவுமிய நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா 12 நாட்கள் சிறப்பாக நடைபெறும். இந்தாண்டிற்கான விழா கடந்த மாதம் 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினந்தோறும் காலை மற்றும் இரவில் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது.

6-ம் திருநாள் அன்று ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றுதல் வைபவமும், இரவு யானை வாகனத்தில் சுவாமி வீதிஉலா நிகழ்ச்சியும், 7-ம் திருநாள் அன்று மாலை சூர்ணாபிஷேகம் மற்றும் தங்கதோளுக்கினியானில் சுவாமி புறப்பாடும் நடந்தது. 8-ம் திருநாள் அன்று இரவு சுவாமி குதிரை வாகனத்தில் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது.

தேரோட்டம் நிறுத்தம்

10-ம் திருநாளான நேற்று தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக நேற்று காலை அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி எழுந்தருளினார். தொடர்ந்து பக்தர்கள் பெருமாளுக்கு அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர். மாலையில் திரளான பக்தர்கள் கொட்டும் மழையிலும் தேரை வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடைபெற்றது. ஆனால் 5.25 மணிக்கு மேல் பலத்த மழை பெய்ய தொடங்கியது. நீண்ட நேரமாகியும் மழை விடாததால் தேரோட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் இன்று மீண்டும் தேர் வடம்பிடித்து இழுக்கப்பட்டு நான்கு ரத வீதிகள் வழியாக வந்து நிலையை அடைய உள்ளது.

நாளை இரவு ஸ்ரீதேவி, பூதேவியுடன் மின் விளக்கால் அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் பெருமாள் எழுந்தருளி திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணிமதுராந்தகி நாச்சியார் உத்தரவின் பேரில் தேவஸ்தான மேலாளர் மற்றும் கோவில் கண்காணிப்பாளர் ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story