ஏற்காட்டில்சேர்வராயன் கோவில் தேரோட்டம்
ஏற்காட்டில் சேர்வராயன் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
ஏற்காடு
தேரோட்டம்
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் 4 ஆயிரத்து 500 அடி உயரத்தில் சேர்வராயன் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தேரோட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான தேரோட்டம் நேற்று மதியம் 2 மணிக்கு தொடங்கியது. இதையொட்டி தேர் மலர்கள், பழங்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
முன்னதாக சேர்வராயன், காவிரியம்மாள் சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன. பின்னர் சேர்வராயன், காவிரியம்மாள் சாமிகள் தேரில் எழுந்தருளினர். தொடர்ந்து தேரோட்டம் நடந்தது.
வழிபாடு
ஏற்காடு மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். மேலும் ராகி, கம்பு, கேழ்வரகு போன்ற பயிர்களை சாமிக்கு காணிக்கையாக படைத்து வழிபட்டனர். தேர் வரும் வழியில் தேங்காய்களை உடைத்தும், கற்பூரம் ஏற்றியும் பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றினர்.
தேரோட்டத்தையொட்டி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கோவிலுக்கு 30-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. ஏற்காட்டில் மிகவும் முக்கியமான திருவிழா என்பதால் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.