அரியக்குடி திருவேங்கடமுடையான் கோவில் தேரோட்டம்


அரியக்குடி திருவேங்கடமுடையான் கோவில் தேரோட்டம்
x
தினத்தந்தி 4 Jun 2023 12:15 AM IST (Updated: 4 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வைகாசி திருவிழாவையொட்டி காரைக்குடி அருகே உள்ள அரியக்குடி திருவேங்கடமுடையான் கோவிலில் இன்று தேரோட்டம் நடக்கிறது.

சிவகங்கை

காரைக்குடி

வைகாசி திருவிழாவையொட்டி காரைக்குடி அருகே உள்ள அரியக்குடி திருவேங்கடமுடையான் கோவிலில் இன்று தேரோட்டம் நடக்கிறது.

வைகாசி திருவிழா

காரைக்குடி அருகே அரியக்குடியில் தென்திருப்பதி என்று அழைக்கப்படும் திருவேங்கடமுடையான் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்திற்குட்பட்ட பிரசித்தி பெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி திருவிழா 10 நாட்களுக்கும் மேல் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு இந்த விழா கடந்த மாதம் 27-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. மாலையில் ஹம்ச வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

விழாவையொட்டி தினந்தோறும் இரவு திருவேங்கடமுடையான் ஸ்ரீதேவி, பூதேவியருடன் சிம்ம வாகனம், வெள்ளி ஹனுமந்த வாகனம், சொர்ண கருட வாகனம், வெள்ளி சேஷ வாகனம், யானை வாகனம், வெள்ளி மஞ்சனம், சொர்ண குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இதேபோல் காலையில் பல்லக்கு, சிவிகை, சூர்ணாபிஷேகம், வெண்ணைத்தாழி, ததாரோஹணம், தெப்பம், உதய கருட வாகனத்தில் வலம் வந்து காட்சியளித்தார். விழாவின் 9-ம் திருநாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை கோவில் முன்பு அலங்கரிக்கப்பட்ட தேரில் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் எழுந்தருளி காட்சியளிக்கிறார்.

தேரோட்டம்

தொடர்ந்து பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபாடு செய்ய உள்ளனர். மாலை 4 மணிக்கு பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடக்கிறது. நாளை இரவு கோ ரதமும், வரும் 6-ந்தேதி வெள்ளி ரதமும், 7-ந்தேதி இரவு அலங்கார பங்களா தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது. மறுநாள் 8-ந்தேதி பூப்பல்லக்கு மற்றும் விடையாற்றி நிகழ்ச்சி நடக்கிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் அடைக்கம்மை ஆச்சி மற்றும் கோவில் செயல் அலுவலர் விநாயகவேல் ஆகியோர் செய்து வருகின்றனர்.

திருமஞ்சனம்

இதேபோல் தேவகோட்டை ரெங்கநாதபெருமாள் கோவிலில் வைகாசி பவுர்ணமியை முன்னிட்டு நேற்று காலை மகாலெட்சுமி தாயாருக்கு திருமஞ்சனம் நிகழ்ச்சியும், தொடர்ந்து 11 மணிக்கு நம்மாழ்வார் திருநட்சத்திரத்தை முன்னிட்டு ரெங்கநாதபெருமாளுக்கும், நம்மாழ்வாருக்கும் திருமஞ்சனம் நிகழ்ச்சியும், மாலையில் நம்மாழ்வார் உள்வீதி உலா புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது.

1 More update

Next Story