அரியக்குடி திருவேங்கடமுடையான் கோவில் தேரோட்டம்

வைகாசி திருவிழாவையொட்டி காரைக்குடி அருகே உள்ள அரியக்குடி திருவேங்கடமுடையான் கோவிலில் தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்
காரைக்குடி
வைகாசி திருவிழாவையொட்டி காரைக்குடி அருகே உள்ள அரியக்குடி திருவேங்கடமுடையான் கோவிலில் தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்
வைகாசி திருவிழா
காரைக்குடி அருகே அரியக்குடியில் தென்திருப்பதி என்று அழைக்கப்படும் திருவேங்கடமுடையான் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்திற்குட்பட்ட பிரசித்தி பெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் 10 நாட்களுக்கும் மேல் வைகாசி திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டுக்கான வைகாசி திருவிழா கடந்த மாதம் 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மாலையில் ஹம்ச வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
விழாவையொட்டி தினந்தோறும் இரவு திருவேங்கடமுடையான் ஸ்ரீதேவி, பூதேவியருடன் சிம்ம வாகனம், வெள்ளி ஹனுமந்த வாகனம், சொர்ண கருட வாகனம், வெள்ளி சேஷ வாகனம், யானை வாகனம், வெள்ளி மஞ்சனம், சொர்ண குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதேபோல் காலையில் பல்லக்கு, சிவிகை, சூர்ணாபிஷேகம், வெண்ணைத்தாழி, ததாரோஹணம், தெப்பம், உதய கருட வாகனத்தில் வலம் வந்து காட்சியளித்தார்.
தேரோட்டம்
விழாவின் 9-ம் நாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. முன்தாக காலையில் கோவில் முன்பு அலங்கரிக்கப்பட்ட தேரில் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் திருவேங்கடமுடையான் எழுந்தருளி காட்சியளித்தார். தொடர்ந்து பக்தர்கள் தேரில் எழுந்தருளிய பெருமாளுக்கு அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர். தொடர்ந்து மாலை 4 மணிக்கு அதிர் வேட்டுகள் முழங்க பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடைபெற்றது.
தேர் கோவிலை சுற்றி நான்கு ரத வீதிகள் வழியாக வந்து நிலையை அடைந்தது. விழாவையொட்டி இரவு கோ ரதமும், நாளை (செவ்வாய்க்கிழமை) வெள்ளி ரதமும், வரும் 7-ந் தேதி இரவு அலங்கார பங்களா தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது. 8-ந்தேதி பூப்பல்லக்கு மற்றும் விடையாற்றி நிகழ்ச்சி நடக்கிறது.
பாதுகாப்பு பணி
விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் அடைக்கம்மை ஆச்சி மற்றும் கோவில் செயல் அலுவலர் விநாயகவேல் ஆகியோர் செய்து வருகின்றனர். தேரோட்டத்தை முன்னிட்டு காரைக்குடி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.






