ஓம் சக்தி மாரியம்மன் கோவிலில் தேரோட்டம்
சிதம்பரம் ஓம்சக்தி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் திரளானபக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
சிதம்பரம்,
ஆடி திருவிழா
சிதம்பரம் அனந்தீஸ்வரர் கோவில் தெருவின் வடபுறம் நாகசேரிகுளம் பகுதியில் பிரசித்தி பெற்ற ஓம் சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விழா கடந்த 19-ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 22-ந் தேதி இரவு அம்மனுக்கு தெருவடைச்சான் நடைபெற்றது.
தேரோட்டம்
பின்னர் நேற்று காலை 9 மணி அளவில் மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளியதும். பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று நிலையை அடைந்தது. தொடா்ந்து மாலை 6 மணியளவில் திருவிளக்கு பூஜை மற்றும் காத்தவராயன் திருக்கல்யாணம் நடைபெற்றது.
விழாவை தொடர்ந்து இன்று(வியாழக்கிழமை) காலை காளி நடனத்துடன் அம்மன் வீதி உலா, நாளை(வெள்ளிக்கிழமை) காலை அம்மனுக்கு பால்குட ஊர்வலம், மகா அபிஷேகம், 12 மணிக்கு மேல் சக்தி கரகம், பூ கரகம் எடுத்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், மதியம் 2 மணிக்கு மேல் பக்தர்கள் கூழ் வார்த்தல், மாலை 4 மணிக்கு மேல் பூக்கரகம், செடல் காவடி திருவிழா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. நாளை மறுநாள்(சனிக்கிழமை) காலையில் மஞ்சள் நீர் விளையாட்டு, இரவு 8 மணி அளவில் சாமி வீதி உலா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.