திருவரங்குளம் பெரியநாயகி அம்பாள் கோவிலில் தேரோட்டம்


ஆடிப்பூரத்தையொட்டி திருவரங்குளம் பெரியநாயகி அம்பாள் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

அரங்குள நாதர் கோவில்

திருவரங்குளத்தில் சோழர் காலத்து சுயம்புலிங்க பெரியநாயகி அம்பாள் உடனுறை அரங்குள நாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி பூரத்தையொட்டி கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. இதையொட்டி அம்பாளுக்கு தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று அன்ன வாகனம், காமதேனு வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் வீதியுலா வந்தார்.

நேற்று காலை 9 மணியளவில் பெரியநாயகி அம்பாளுக்கு சிவப்பு பட்டாடை உடுத்தி தங்க ஆபரணங்களை அணிவித்து மலர் அலங்காரம் செய்து தேரில் எழுந்தருள செய்து கோவில் வழக்கப்படி கோவில் மேற்பார்வையாளர், மண்டகபடிதாரர்கள், ஊர் முக்கிய பிரமுகர்கள், கோவில் பணியாளர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது.

திருக்கல்யாண நிகழ்ச்சி

பின்னர் கோவில்பட்டி தேர் வடம் தொடும் வகையறாவினர் தேர்வடம் தொட்டுவிட மேள தாளம், வாண வேடிக்கைகளுடன் தேரோடும் நான்கு வீதிகளிலும் திரளான பெண்கள் தேரை வடம் பிடித்து ஓம் சக்தி, சிவ சக்தி என்று பக்தி கரகோஷம் எழுப்ப தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

இதையடுத்து, அரங்குள லிங்கம் பெரியநாயகி அம்பாள் நற்பணி மன்றத்தினர் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு கோவிலில் சுவாமி-அம்பாளுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.

தேரோட்டம்

அன்னவாசல் அருகே உள்ள குடுமியான்மலையில் குடைவரைக்கோவிலான அகிலாண்டேஸ்வரி சமேத சிகாகிரீஸ்வரர் கோவிலில் ஆடித்தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் சிகாகிரீஸ்வரர்- அகிலாண்டேஸ்வரி அம்பாளை தேரில் எழுந்தருள செய்தனர். பின்னர் மேள, தாளம் முழங்க திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்தனர். தேர் முக்கிய வீதிகளின் வழியாக அசைந்தாடி சென்றது. ஒவ்வொரு வீதியிலும் பக்தர்கள் கூடி நின்று தேங்காய், பூ, பழம் வைத்து அர்ச்சனை செய்து வழிபட்டனர். அதன்பின்னர் தேர் நிலையை வந்தடைந்தது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு ஆராதனை நடந்தது.

இதில் அன்னவாசல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

சந்தன காப்பு அலங்காரம்

கீரனூர் தேரடி கருப்பர், கொங்கணி கருப்பர், பகவதி அம்மன் கோவில்களில் ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கீரனூர் தாலுகா அலுவலக சாலையில் உள்ள கோட்டைமேடு விநாயகருக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

ஆடிப்பூரத்தையொட்டி பெருங்களூரில் உள்ள மங்களநாயகியம்மன் உடனுறை வம்சோத்தாரகர் கோவில் திருவிழா கடந்த 13-ந் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில் மங்களநாயகி அம்மன் எழுந்தருளி முக்கிய வீதிகளின் வழியாக சென்றார். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.


Next Story