தேரழுந்தூர் ஆமருவிப்பெருமாள் கோவில் தேரோட்டம்
குத்தாலம் அருகே தேரழுந்தூர் ஆமருவிப்பெருமாள் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்தனர்.
குத்தாலம்:
குத்தாலம் அருகே தேரழுந்தூர் ஆமருவிப்பெருமாள் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்தனர்.
ஆமருவிப்பெருமாள் கோவில்
குத்தாலம் அருகே தேரழுந்தூர் கிராமத்தில், 108 திவ்ய தேசங்களில் 10-வது ஸ்தலமான ஆமருவிப்பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா கடந்த 30-ந்தேதி பெரிய திருமஞ்சனம், அனுக்ஞை, சேனை முதல்வர் புறப்பாடுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து கொடியேற்றம், இந்திர விமானம், வெள்ளி சூரிய பிரபை, சுவர்ண சேஷ வாகனம், வெள்ளி கருட சேவை, ஸ்வர்ண அனுமந்த வாகனம், சொர்ண கஜவாகனம், வெள்ளி விமானம், ஸ்வர்ண குதிரை வாகனம் உள்ளிட்ட புறப்பாடு நடந்தது.
பின்னர் விழாவின் 9-ம் நாளான நேற்று முன்தினம் தேரோட்டம் நடந்தது. முன்னதாக தாயார் மற்றும் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு தேரில் எழுந்தருளி, சகல வேத நாத வாத்தியங்களுடன் தேரோட்டம் நடந்தது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா, கோபாலா என கோஷமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேரோட்டம்
பின்னர் தேரானது 4 வீதிகளையும் சுற்றி வந்து தேர் நிலையை அடைந்தது. முன்னதாக பக்தர்கள் தங்களது இல்லங்கள்தோறும் அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தினர். பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் தேரழுந்தூர், பெருமாள்கோவில், மேலையூர், தொழுதாலங்குடி ஊராட்சிகள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் ஹரிசங்கரன், செயல் அலுவலர் சுந்தரராஜன் உள்ளிட்ட ஆமருவிப் பெருமாள் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர். இதில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் மற்றும் பாதுகாப்பு பணியில் குத்தாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதாராணி, சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையில் குத்தாலம் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.