சிகாகிரீஸ்வரர், அரங்குளநாதர் கோவில்களில் தேரோட்டம்

குடுமியான்மலை சிகாகிரீஸ்வரர், அரங்குளநாதர் கோவில்களில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேர்களை வடம் பிடித்து இழுத்தனர்.
அன்னவாசல்:
சிகாகிரீஸ்வரர் கோவில்
அன்னவாசல் அருகே குடுமியான்மலை குடைவரை கோவிலான அகிலாண்டேஸ்வரி சமேத சிகாகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடித்திருவிழா கொடியேற்றப்பட்டு தொடங்கியது. ஒவ்வொரு நாளும் மண்டகப் படிதாரர்கள் சார்பில் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் சிகாகிரீஸ்வரர் சமேத அகிலாண்டேஸ்வரி அம்பாள் தேரில் எழுந்தருளினர். இதையடுத்து திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரினை முக்கிய வீதிகளின் வழியாக பக்தர்கள் இழுத்து வந்து கோவில் நிலையை வந்தடைந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அரங்குளநாதர் கோவில்
திருவரங்குளத்தில் பெரியநாயகி அம்பாள் சமேத அரங்குளநாதர் கோவில் ஆடிப்பூர திருவிழா தொடங்கி நடைபெற்று வருகின்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் சாமி, அம்பாள் திருத்தேரில் எழுந்தருளினர். பின்னர் தேரை திரளான பக்தர்கள் மேள தாளம் முழங்க வடம் பிடித்து இழுத்தனர். தேர் நான்கு வீதிகளில் அசைந்தாடி வந்து பின்னர் நிலையை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பொதுமக்கள் சார்பில், ஆங்காங்கே தண்ணீர் பந்தல் அமைத்து பானகம், மோர், அன்னதானம் வழங்கப்பட்டது. இதைதொடர்ந்து மாலை நைனாரி குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும், இரவு திருக்கல்யாண உற்சவமும் நடைபெற்றது.






