புதுநடுவலூரில் மாரியம்மன் கோவில் தேரோட்டம்


புதுநடுவலூரில் மாரியம்மன் கோவில் தேரோட்டம்
x

புதுநடுவலூரில் மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.

பெரம்பலூர்

மாரியம்மன் கோவில்

பெரம்பலூர் அருகே உள்ள புதுநடுவலூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருவிழா கடந்த 14-ந்தேதி பூச்சொரிதலுடன் தொடங்கியது. இதையடுத்து 16-ந் தேதி குடிஅழைத்தல், காப்புகட்டுதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதையடுத்து நாள்தோறும் அம்மன் ஒவ்வொரு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு தரிசனம் அளித்து வருகிறார்.

இதனைதொடர்ந்து 21-ந் தேதி மாரியம்மனுக்கு பால் அபிஷேகமும், கஞ்சிவார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. 22-ந் தேதி மாவிளக்கு பூஜை, பால்குடம் எடுத்தல், அக்னி மிதித்தல், அலகு குத்துதல், அக்னிசட்டி எடுத்தல், பொங்கல் விழா நடைபெற்றது.

தேரோட்டம்

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில், தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் அ.சீனிவாசன், மண்ணச்சநல்லூர் எம்.எல்.ஏ. கதிரவன், தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் செயலர் நீலராஜ், துணைத்தலைவர் அனந்தலட்சுமி கதிரவன், புதுநடுவலூர் ஊராட்சிமன்ற தலைவர் ஜெயந்தி மற்றும் முக்கிய பிரமுகர்கள் வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

இதில் புதுநடுவலூர், பெரம்பலூர் நகரம், அரணாரை, வெள்ளனூர், நொச்சியம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியே இழுத்து வரப்பட்டு மாலையில் நிலையை அடைந்தது. அதனைத்தொடர்ந்து பிராயசித்த வழிபாடு நடந்தது. விழாவில் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர்கள் ராஜபூபதி, மணி, நிதி அலுவலர் ராஜசேகர், புதுநடுவலூர் ஊராட்சிமன்ற துணைத்தலைவர் செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருத்தேர் பெருந்திருவிழா இன்று (புதன்கிழமை) மஞ்சள் நீராட்டு விழாவுடன் நிறைவடைகிறது.


Next Story