முத்துமாரியம்மன் கோவில்களில் தேரோட்டம்
அரிமளம், மிரட்டுநிலை, ஓணாங்குடியில் உள்ள முத்துமாரியம்மன் கோவில்களில் தேரோட்டம் நடைபெற்றது.
முத்துமாரியம்மன் கோவில்
அரிமளம் பேரூராட்சியில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பங்குனி திருவிழா கடந்த 10-ந் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கியது. இதையடுத்து காப்புகட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் அம்பாளுக்கு 11 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு காலை, மாலை நேரங்களில் உற்சவர் முத்துமாரியம்மன் திருவீதியுலா நடைபெற்றது. 9-ம் நாள் திருவிழாவையொட்டி நேற்று தேரோட்டம் நடைபெற்றது.
தேரில் முத்துமாரியம்மன் பட்டு மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு எழுந்தருளினார். அதனை தொடர்ந்து சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் முத்துமாரியம்மனுக்கு அரோகரா என்ற கோஷத்துடன் பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். தேர் மெல்ல மெல்ல கோவிலை சுற்றி நான்குரத வீதிகளில் வலம் வந்தது. அப்போது பக்தர்கள் அர்ச்சனை செய்து முத்துமாரியம்மனை வழிபட்டனர். இன்று (செவ்வாய்க்கிழமை) பால்குடம், காவடி, தீமிதித்தல் மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது. நள்ளிரவு அம்மனுக்கு காப்பு களைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது.
ஓணாங்குடி
அரிமளம் ஒன்றியம் ஓணாங்குடி கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா கடந்த 5-ந் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் பல்வேறு தரப்பினரின் மண்டகப்படியும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. நேற்று 9-ம் நாள் திருவிழாவையொட்டி காலை முதல் மாலை வரை பக்தர்கள் பால்குடம், காவடி மற்றும் அலகு குத்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். மாலை 5 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. தேரில் முத்துமாரியம்மன் பட்டு மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு எழுந்தருளினார். அதனை தொடர்ந்து சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் முத்துமாரியம்மன் அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்து வயல்வெளி வழியாக கோவிலை சுற்றி இழுத்தனர். தேர் மெல்ல மெல்ல அசைந்தாடி சென்றது. அப்போது சில இஸ்லாமிய பெண்களும் முத்துமாரியம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். இன்று (செவ்வாய்க்கிழமை) வடமாடு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியும், மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெறுகிறது. நள்ளிரவு அம்மனுக்கு காப்பு களைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது.
மிரட்டுநிலை
அரிமளம் ஒன்றியம் மிரட்டுநிலை கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா கடந்த 5-ந்தேதி பூச்சொரிதலுடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் அம்பாளுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு காலை மாலை உற்சவர் முத்துமாரியம்மன் திருவீதி உலா நடைபெற்றது. நேற்று 9-ம் திருவிழாவையொட்டி காலை முதல் மாலை வரை பக்தர்கள் பால்குடம், காவடி மற்றும் அலகு குத்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். அதனை தொடர்ந்து மாலை 5 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. தேரில் முத்துமாரியம்மன் பட்டு மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு எழுந்தருளினார். அதனை தொடர்ந்து சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் முத்துமாரியம்மன் அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் வடம் பிடித்து கொக்குஊரணியை சுற்றி தேரை இழுத்தனர். இன்று (செவ்வாய்க்கிழமை) சிறிய மாடு, பெரிய மாடு, கரிச்சான் மாடு என 3 பிரிவாக மாட்டுவண்டி எல்கைப்பந்தயம் நடைபெற உள்ளது. தொடர்ந்து மஞ்சள் நீராட்டு விழாவும், நள்ளிரவு அம்மனுக்கு காப்பு களைத்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டத்துக்கான ஏற்பாடுகளை அரிமளம், மிரட்டுநிலை, ஓணாங்குடி கிராம மக்களும், விழா குழுவினரும் செய்து இருந்தனர்.