வெங்கடாசலபுரம் கிராமத்தில் செல்லியம்மன் கோவில் தேரோட்டம்
வெங்கடாசலபுரம் கிராமத்தில் செல்லியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
புள்ளம்பாடி ஒன்றியம் வெங்கடாசலபுரம் கிராமத்தில் செல்லியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் சித்திரை திருவிழா கடந்த 25-ந் தேதி காப்புகட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதையொட்டி அம்மன் தினமும் காளை, சிங்கம், யானை, அன்னபட்சி, மயில், காமதேனு, குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தார். விழாவின் சிகரநிகழ்ச்சியாக நேற்று தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக தேருக்கு அம்மன் அழைத்துவரப்பட்டார். பின்னர் சிறப்பு பூஜைக்கு பின்னர் காலை 10.30 மணி அளவில் பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுக்க தேரோட்டம் தொடங்கியது. தேர் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து மாலை 7 மணியளவில் நிலையை வந்தடைந்தது. விழாவில் ஊராட்சிமன்ற துணைத்தலைவர் சக்திவேல், நத்தமாங்குடி ஆலங்குடி மகாஜனம், கோவாண்டகுறிச்சி, புள்ளம்பாடி, ஆலம்பாக்கம், புதூர் பாளையம், வாணதிரையான்பாளையம், கல்லக்குடி மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். தேரோட்டத்தையொட்டி ஆங்காங்கே பக்தர்களுக்கு நீர்மோர், அன்னதானம் வழங்கப்பட்டது.விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம முக்கியஸ்தர்கள் சரவணன், கருப்புடையார், சுந்தரம், சுகுமார், சந்திரன், தங்கையன், ஊராட்சிமன்றதலைவர் குறிஞ்சி பழனிசாமி மற்றும் கிராமஇளைஞர்கள், பொதுமக்கள்செய்திருந்தனர். இன்று (வியாழக்கிழமை) இரவு 7 மணிஅளவில் இளைஞர்கள் குழு சார்பாக இன்னிசை நிகழ்ச்சியும், 10 மணியளவில் செல்லியம்மன் தங்கபல்லக்கில் வீதி உலா வருகிறார். நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணியளவில் செல்லியம்மனுக்கு மஞ்சள் நீராட்டு திருவீதியுலாவுடன் திருவிழா நிறைவுபெறுகிறது.