மது அடைக்கலம் காத்தஅம்மன் கோவில் தேரோட்டம்
திருமயம் அருகே மது அடைக்கலம் காத்த அம்மன் கோவில் ேதரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
மது அடைக்கலம் காத்த அம்மன் கோவில்
திருமயம் அருகே விராச்சிலையில் மது அடைக்கலம் காத்த அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்று வந்தன. அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதையடுத்து நேற்று அம்மனுக்கு பொங்கல் வைத்து, கிடாவெட்டி பக்தர்கள் வழிபட்டனர்.
தேரோட்டம்
தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் திருத்தேரில் எழுந்தருளினார். பின்னர் தப்பாட்டம், குதிரை ஆட்டம், செண்டை மேளம் முழங்க வாணவேடிக்கையுடன் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் பக்தர்களின் கூட்டத்தில் ஆடி அசைந்து வந்தது. இதையடுத்து தேர் கோவில் நிலையை வந்தடைந்தது.
அப்போது பக்தர்கள் ஆங்காங்கே நின்று அம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். இதையடுத்து கோவில் நிலையை தேர் வந்தடைந்ததையடுத்து பக்தர்கள் கைத்தட்டி உற்சாகப்படுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.