ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சோதனை
பரமத்திவேலூரில் ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சோதனை செய்தனர்.
பரமத்திவேலூர்
பரமத்தி வேலூர், பேட்டை மற்றும் பழைய பைபாஸ் சாலையில் உள்ள ஓட்டல்கள், சில்லி சிக்கன் விற்பனை செய்யும் கடைகளில் தரமற்ற உணவு பொருட்கள் விற்பனை செய்வதாக மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் அருண் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வகுமார் கொண்ட குழுவினர் திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது தயாரிப்பு தேதி இல்லாமல் வைத்திருந்த சில்லி பவுடர்கள் மூலம் உணவுப் பொருட்கள் தயாரித்து விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும் பழைய சப்பாத்தி மாவு மற்றும் கெட்டுப்போன இறைச்சிகளை பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அளித்தனர்.
இது தொடர்பாக ஓட்டல் கடைக்கு நோட்டீஸ் வழங்கி சுகாதாரமற்ற 6 கிலோ சில்லி பவுடர்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து ஆய்வு செய்து தரமற்ற உணவு பொருட்களை தயாரித்த அனைத்து கடைகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இதுபோன்ற தரமற்ற உணவு பொருட்களை தயாரித்தாலோ, காலாவதியான சில்லி பவுடரை உபயோகப்படுத்தினாலோ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கடைகளுக்கு சீல் வைத்து அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.