தர்மபுரி மாவட்டத்தில் வட்டார போக்குவரத்து துறை மூலம் 6,608 வாகனங்களுக்கு தணிக்கை அறிக்கை-ரூ.4.37 கோடி வருவாய்
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் கடந்த நிதியாண்டில் வட்டார போக்குவரத்து துறை மூலம் 6,608 வாகனங்களுக்கு தணிக்கை அறிக்கை அளிக்கப்பட்டது. இதில் ரூ.4.37 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
வாகன தணிக்கை
தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 2022-2023-ம் நிதியாண்டில் வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் தலைமையில் பறக்கும் படை மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கதிர்வேல், தர்மபுரி மோட்டார் வாகன ஆய்வாளர் தரணீதர், பாலக்கோடு மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கிடுசாமி, அரூர் மோட்டார் வாகன ஆய்வாளர் குலோத்துங்கன் ஆகியோர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வாகன தணிக்கை மேற்கொண்டனர். மாவட்டம் முழுவதும் 57 ஆயிரத்து 500 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டு 6 ஆயிரத்து 608 வாகனங்களுக்கு தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டன.
குறிப்பாக வரி செலுத்தாமல் இயக்குதல், தகுதி சான்று, காப்பு சான்று, புகைச்சான்று, புதுப்பிக்காமல் இயக்குதல், அனுமதி சீட்டு இல்லாமல் இயக்குதல் போன்ற விதிமீறல்களுக்காக 828 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி சென்றதாக 220 வாகனங்களுக்கும், அதிக பாரம் ஏற்றி சென்ற 145 வாகனங்களுக்கும், அனுமதி சீட்டு இல்லாமல் இயக்கிய 283 வாகனங்களுக்கும், அதிவேகமாக இயங்கிய 3 ஆயிரத்து 425 வாகனங்களுக்கும், தகுதிச் சான்று பெறாமல் இயங்கிய 475 வாகனங்களுக்கும் வாகன தணிக்கையின் போது அபராதம் மிதிக்கப்பட்டது. இதேபோன்று காப்பு சான்று, புகை சான்று இல்லாமல் இயக்கிய 1,432 வாகனங்களுக்கும், சிவப்பு நிற பிரதிபலிப்பான் இல்லாமல் இயக்கிய 589 வாகனங்களுக்கும் மற்றும் சிவப்பு எச்சரிக்கை விளக்கு இல்லாமல் இயக்கிய 392 வாகனங்களுக்கும் வாகன தணிக்கையின் போது அபராதம் விதிக்கப்பட்டது.
ரூ.4¼ கோடி வருவாய்
சாலை வரியாக ரூ.2 கோடியே 42 ஆயிரத்து 793 மற்றும் அபராத கட்டணமாக ரூ.1 கோடியே 13 லட்சத்து 76 ஆயிரத்து 718 என மொத்தம் ரூ.3 கோடியே 14 லட்சத்து 19 ஆயிரத்து 511 உடனடியாக வசூலிக்கப்பட்டது. மேலும் இந்த வாகன சோதனை மூலம் பல்வேறு விதிமீறல்களுக்கு இணக்க கட்டணமாக ரூ.1 கோடியே 23 லட்சத்து 28 ஆயிரத்து 994 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் கடந்த 2022-2023-ம் நிதியாண்டில் தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில் அரசுக்கு மொத்தம் ரூ.4 கோடியே 37 லட்சத்து 48 ஆயிரத்து 505 வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.