மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பு


மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பு
x
தினத்தந்தி 5 July 2023 12:07 PM GMT (Updated: 6 July 2023 10:08 AM GMT)

திருப்பூர் மாவட்டத்தில் இருப்பில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முதல்நிலை சரிபார்ப்பு பணி தொடங்கி நடந்து வருகிறது.

திருப்பூர்

வாக்குப்பதிவு எந்திரங்கள்

இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பில் 2024-ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை தயார் செய்யும் பணியை தொடங்கியுள்ளது. இதற்காக மாவட்டம் வாரியாக வாக்குப்பதிவு எந்திரங்களை பரிசோதிக்கும் பணி தொடங்கி நடக்கிறது.

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் 8 தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள இருப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதன்படி 5 ஆயிரத்து 898 பேலட் எந்திரங்கள், 3 ஆயிரத்து 600 கண்ட்ரோல் எந்திரங்கள், 3 ஆயிரத்து 898 வி.வி.பேட் எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.

முதல்நிலை சரிபார்ப்பு பணி

இந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை முதல்நிலை சரிபார்ப்பு பணியில் பெங்களூருவில் இருந்து வந்த பெல் நிறுவன என்ஜினீயர்கள் 8 பேர் மேற்கொண்டுள்ளனர். அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சியினர் முன்னிலையில் எந்திரங்கள் சரிபார்ப்பு பணி நடக்கிறது. கலெக்டர் கிறிஸ்துராஜ், தேர்தல் பிரிவு தனி தாசில்தார் தங்கவேல் ஆகியோர் பங்கேற்றனர்.

வாக்குப்பதிவு எந்திரங்களில் உள்ள அனைத்து பதிவுகளும் அழிக்கப்பட்டு வருகிறது. பின்னர் அரசியல் கட்சியினர் தெரிவிக்கும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரகளில் ஏதாவது ஒன்றை எடுத்து அதில் மாதிரி பேலட்டுகள் பொருத்தப்பட்டு 96 ஓட்டுகள் பதிவாகும் வரை மாதிரி ஓட்டுப்பதிவு நடத்தப்படும். அதன்பிறகு அவர்கள் முன்னிலையில் வாக்குகள் எண்ணப்பட்டு உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் இருப்பு வைக்கப்படுகிறது. இந்த பணி வருகிற ஆகஸ்டு மாதம் 10-ந் தேதி நிறைவடையும். திருப்பூர் மாவட்ட தேர்தலில் பயன்படுத்துவதற்காக 135 சதவீதம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் இருப்பில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

----


Next Story