திருவள்ளுவர் சிலைக்கு ரசாயன கலவை பூசும்பணி நிறைவடைந்தது


திருவள்ளுவர் சிலைக்கு ரசாயன கலவை பூசும்பணி நிறைவடைந்தது
x

பொங்கல் பண்டிகை முதல் திருவள்ளுவர் சிலையை சுற்றுலா பயணிகள் படகில் நேரில் சென்று பார்வையிட அனுமதிக்கப் படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துஉள்ள பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை எழுப்பப்பட்டு உள்ளது. இந்த சிலை கடந்த 2000-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந்தேதி அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதியால் திறந்துவைக்கப்பட்டது. இந்த திருவள்ளுவர் சிலையை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று கண்டு களித்து வருகின்றனர்.

இந்த சிலை கடல் உப்புக்காற்றினால் பாதிப்படையாமல் இருப்பதற்காக 4 ஆண்டுகளுக்கு ஒரு முறைரசாயன கலவை பூசப்படுவது வழக்கம். கடந்த 2017 -ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கடைசியாக ரசாயன கலவை பூசப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டில் ரசாயன கலவை பூசஅரசுநடவடிக்கை மேற்கொண்டது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக பணி நடைபெறவில்லை.தற்போது ரூ.1கோடி செலவில் திருவள்ளுவர் சிலையில் இந்த ரசாயனக் கலவை பூசும் பணி நடைபெற்று உள்ளது.

இந்த பணி நடைபெற்றதை தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் 6-ந்தேதி ரசாயன கலவை பூசும் பணி முடிவடையும் வரை திருவள்ளுவர் சிலையை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என்று தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் அறிவித்து இருந்தது. இதைத் தொடர்ந்து ஜூன் மாதம் 6-ந்தேதி முதல் இப்பணி தொடங்கி நடைபெற்று வந்தது. முதல்கட்டமாக இந்த சிலையை சுற்றிலும் 145 அடி உயரத்துக்கு இரும்பு குழாய்கள் மூலம் சாரம் அமைக்கும் பணி நடைபெற்றது.

இதற்காக சென்னை மற்றும் தூத்துக்குடியில் இருந்த 80 டன் இரும்பு குழாய்கள் கன்னியாகுமரிக்கு கொண்டு வரப்பட்டது. இவை படகுகள் மூலம் திருவள்ளுவர் சிலை அமைந்து உள்ள பாறைக்கு கொண்டு செல்லப்பட்டது. அடுத்த கட்டமாக ரசாயனக் கலவை பூசுவதற்காக சிலை முழுவதும் நல்ல தண்ணீர் மூலம் கழுவி சுத்தம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து சிலையின் ஒவ்வொரு பகுதியில் உள்ள சிமெண்ட் பாய்ண்ட்களில் படிந்திருந்த கடல் உப்பு தன்மை அகற்றப்பட்டு கடுக்காய் சுண்ணாம்பு பனைவெல்லம் ஆகியவை கலந்த சிமெண்ட் கலவை பூசும் பணி நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து திருவள்ளுவர்சிலையில் படிந்து உள்ள உப்பு தன்மையை உறிஞ்சி அகற்றும் தன்மை கொண்ட காகித கூழ் பூசும்பணி நடைபெற்றது. அதற்கு அடுத்த கட்டமாக சிலையில் மீண்டும் நல்ல தண்ணீர் பாய்ச்சி கழுவி சுத்தம் செய்யப்பட்டது. இறதி கட்டமாகரசாயன கலவை பூசும் பணி நடைபெற்றது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வல்லுநர்கள் குழு கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துஉள்ள திருவள்ளுவர் சிலையை படகில் சென்று ஆய்வு செய்தனர்.

அப்போதுஅந்த குழுவினர் திருவள்ளூர் சிலையில் படிந்துள்ள உப்பு தன்மை முழுமையாக அகற்றப்பட்டு விட்டதா? என்று பரிசோதித்துப் பார்த்தனர். அதன் பிறகு திருவள்ளுவர் சிலையில் ரசாயன கலவை பூசும்பணி நடந்து வந்தது. திருவள்ளுவர் சிலையில் ரசாயன கலவை பூசம் பணி தற்போது நிறைவடைந்து உள்ளது. இதைத் தொடர்ந்து தற்போது 145அடி உயரத் துக்கு அமைக்கப்பட்டு இருந்த சாரம் பிரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இன்னும் சில நாட்களில் இந்த சாரம் பிரிக்கும்பணி நிறைவடைந்தும் பொங்கல் பண்டிகை முதல்திருவள்ளுவர் சிலையை சுற்றுலா பயணிகள் படகில் நேரில் சென்று பார்வையிட அனுமதிக்கப் படுவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது.


Next Story