செங்கல்பட்டில் பா.ம.க. நிர்வாகி கொலை: தப்பி ஓடிய வாலிபரை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார்


செங்கல்பட்டில் பா.ம.க. நிர்வாகி கொலை: தப்பி ஓடிய வாலிபரை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார்
x

செங்கல்பட்டில் பா.ம.க. நிர்வாகியை வெட்டிக்கொன்றுவிட்டு தப்பி ஓடிய வாலிபரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செங்கல்பட்டு,

செங்கல்பட்டை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 46). செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பா.ம.க. நகரச் செயலாளராக இருந்தார். செங்கல்பட்டு நகரில் உள்ள மணிக்கூண்டு பகுதியில் பூக்கடை நடத்தி வந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் நாகராஜை வழிமறித்தது.

விபரீதம் நடக்க இருப்பதை உணர்ந்த அவர், அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் அதற்குள் சுற்றி வளைத்த கும்பல், அவரை சரமாரியாக வெட்டி சாய்த்தது. இதில் ரத்தவெள்ளத்தில் உயிரிழந்தார். உடனே அந்த கொலைக்கும்பல் தப்பி ஓடி விட்டது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள நகரின் மையப்பகுதியில் நடந்த இந்த கொடூர சம்பவம் அந்த பகுதியில் இருந்தவர்களை அதிர்ச்சியில் உறையவைத்தது.

பா.ம.க. போராட்டம்

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

ஆனால் நாகராஜின் உடலை பிணவறைக்கு எடுத்துச் செல்ல விடாமல் தடுத்து அவரது உறவினர்கள் மற்றும் பா.ம.க. நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

பின்னர் கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, நாகராஜ் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் என்ன? என்று தீவிர விசாரணை நடத்தினர்.

கற்களை வீசி எறிந்த வாலிபர்

மேலும் பா.ம.க. பிரமுகரின் கொடூர கொலை தொடர்பாக அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு கொலையாளிகளை பிடிக்க தீவிர நடவடிக்கையில் இறங்கினர்.

அப்போது கொலையாளிகள் பரனூர் வழியாக தப்பி செல்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அந்த பகுதியை சுற்றி வளைத்து தீவிர தேடுதல் வேட்டையில் களம் இறங்கினர்.

இதற்கிடையே நள்ளிரவில் கொலை கும்பலை சேர்ந்த ஒருவர் செங்கல்பட்டு அருகே உள்ள புலிபாக்கம் பகுதியில் ரெயில்வே தண்டவாளம் அருகே தப்பி செல்வது தெரிந்தது.

இதையடுத்து செங்கல்பட்டு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசாரை பார்த்ததும் அந்த வாலிபர் தப்பி ஓட முயன்றார். மேலும் பிடிக்க முயன்ற இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் மீது கற்களை வீசி எறிந்தார். இதில் போலீசாருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

சுட்டுப்பிடித்த போலீசார்

தன்னை பிடிக்க முயன்றால்கத்தியால் குத்தி விடுவதாக கூறி, போலீசாரை குத்த முயன்றார். அதற்குள் இன்ஸ்பெக்டர், துப்பாக்கியால் வாலிபரை நோக்கி சுட்டார்.

இதில் வாலிபரின் இடது காலில் குண்டு பாய்ந்தது. நிலைதடுமாறிய அவர் கீழே சரிந்து விழுந்தார். உடனே வாலிபரை பிடித்து அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அதனைத்தொடர்ந்து அவரை செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லலாம் என்று போலீசார் நினைத்தனர். ஆனால் அங்கு இறந்த நாகராஜின் ஆதரவாளர்கள் திரண்டு இருப்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படலாம் என்று கருதி, அந்த வாலிபரை காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.

2 பேர் கைது

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விசாரணையில் அந்த வாலிபரின் பெயர் அஜய் என்கிற சிவப்பிரகாசம் (வயது 22) என்பதும், இவர் செங்கல்பட்டு கே.கே.தெரு பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

அவரது காலில் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை. உடல்நிலை நன்றாக இருப்பதாக கூறப்படுகிறது.

காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் போலீசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இதனால் ஆஸ்பத்திரி வளாகம் பரபரப்பாக காணப்படுகிறது.

அஜயை கைது செய்த போலீசார், அவருடன் இருந்த கார்த்திக் என்பவரையும் பிடித்து கைது செய்தனர். தப்பி ஓடிய மற்ற கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

இதற்கிடையே செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை முடிந்ததும் நாகராஜின் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க ஊழியர் முயற்சித்தனர். ஆனால் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மற்றும் பா.ம.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கலெக்டரிடம் புகார்

தொடர்ந்து போலீசாரின் சமரச பேச்சுவார்த்தையை ஏற்று போராட்டம் கைவிடப்பட்டது. இதனைத்தொடர்ந்து நாகராஜின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் வன்னியர் சங்க மாநில செயலாளர் திருக்கச்சூர் ஆறுமுகம் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட பா.ம.க.வினர் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் பிரணீத் ஆகியோரை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தனர்.

அன்புமணி இன்று ஆர்ப்பாட்டம்

இதற்கிடையே பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக கட்சியினர் கூறுகையில், 'கடந்த 45 நாட்களுக்குள் தொடர்ச்சியாக 3 பா.ம.க. நிர்வாகிகள் கொலை செய்யப்பட்டதை கண்டித்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி அளவில் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி முன்பாக பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது' என்று கூறியுள்ளனர்.


Related Tags :
Next Story