சென்னை-ஏ அலைவரிசை, ரெயின்போ சேவைகள் இணைப்பை திரும்பப்பெற வேண்டும் -ராமதாஸ் வலியுறுத்தல்


சென்னை-ஏ அலைவரிசை, ரெயின்போ சேவைகள் இணைப்பை திரும்பப்பெற வேண்டும் -ராமதாஸ் வலியுறுத்தல்
x

சென்னை-ஏ மத்திய அலைவரிசை, பண்பலை வரிசையான ரெயின்போ ஆகியவற்றின் சேவைகள் இணைப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

சென்னை வானொலி நிலையத்தின் முதன்மை அலைவரிசையான சென்னை-ஏ மத்திய அலைவரிசை, பண்பலை வரிசையான ரெயின்போ ஆகியவற்றின் சேவைகள் இன்று (நேற்று) காலை 5.48 மணி முதல் இணைக்கப்பட்டு ஆகாசவாணி ஒருங்கிணைந்த சேவை என்ற பெயரில் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படுகின்றன. இப்படி நடந்துவிடக்கூடாது என்பதற்காக கடந்த சில ஆண்டுகளாக குரல் கொடுத்து வந்த நிலையில், அதையும் மீறி சென்னை வானொலி சேவைகளை பிரசார்பாரதி இணைத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

3 தரப்பினருக்கு பாதிப்பு

சென்னை வானொலி நிலையத்தின் நிகழ்ச்சி தயாரிப்புச் செலவுகளைக் குறைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த இணைப்பு நடவடிக்கையின் தொடர்ச்சியாக சென்னை-ஏ அலைவரிசையிலும், ரெயின்போ பண்பலையிலும் ஒரே நேரத்தில் ஒரே நிகழ்ச்சிகளைக் கேட்க முடியும். மேலோட்டமாக பார்க்கும்போது இது நல்லது தானே என்று நினைக்கத் தோன்றும். ஆனால், உண்மை அதுவல்ல. இரு வானொலிகளின் சேவை இணைப்பு என்ற பெயரில் இரு சேவைகளின் நிகழ்ச்சிகளும் சராசரியாக 50 சதவீதம் ரத்து செய்யப்பட்டுள்ளன. அந்த நிகழ்ச்சிகளின் தயாரிப்புக்கு ஆகும் செலவை சேமிப்பது தான் திட்டம் ஆகும். அடுத்த சில மாதங்களில் சென்னை-ஏ அலைவரிசையை மூடி, ஒலிபரப்பு செலவையும் குறைக்க பிரசார் பாரதி அமைப்பு திட்டமிட்டுள்ளது.

பிரசார்பாரதியின் இந்த முடிவு 3 தரப்பினரை கடுமையாக பாதிக்கும். பெரும்பான்மையான நிகழ்ச்சிகள், குறிப்பாக ரெயின்போ அலைவரிசையில் ஒலிபரப்பாகும் நேயர்களின் பங்களிப்புடன் கூடிய நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படும்போது நேயர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இந்த நிகழ்ச்சிகளை தயாரிக்கும் பணியில் இருந்த நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள், அறிவிப்பாளர்கள் உள்ளிட்டோர் தங்களின் வேலையை இழப்பார்கள். அடுத்தக்கட்டமாக சென்னை-ஏ ஒலிபரப்பு நிறுத்தப்படும் போது, அதற்கான டிரான்ஸ்மிட்டர்கள் கைவிடப்பட்டு, அவற்றை பராமரித்து வந்த என்ஜினீயர்கள் பணிநீக்கப்படுவார்கள்.

திரும்பப்பெற வேண்டும்

சென்னை-ஏ வானொலியை மூட கடந்த பல ஆண்டுகளாகவே பிரசார்பாரதி திட்டமிட்டு வந்தது. 2022-ம் ஆண்டு ஜனவரி 31-ம் நாளுடன் சென்னை ஏ மூடப்பட இருந்தது. பா.ம.க.வின் எதிர்ப்பால் அப்போது அந்த முடிவு கைவிடப்பட்டது. கொல்கத்தா வானொலியின் முதன்மை அலைவரிசை ஜூன் 30-ந் தேதியுடன் மூடப்பட்ட போதும், சென்னை வானொலிக்கு அத்தகைய நிலை ஏற்பட்டுவிடக்கூடாது என்று பா.ம.க. எச்சரித்தது. ஆனால், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை சற்றும் புரிந்து கொள்ளாமல் சென்னை வானொலியின் இரு சேவைகளை பிரசார்பாரதி இணைத்திருப்பது பெரும் தவறு ஆகும்.

எனவே, சென்னை-ஏ மத்திய அலைவரிசை, பண்பலை வரிசையான ரெயின்போ ஆகியவற்றின் சேவைகள் இணைப்பை உடனடியாக திரும்பப்பெற வேண்டும். இது தொடர்பாக மத்திய அரசுக்கு தமிழக அரசும் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story