சென்னை-ஆலந்தூர் முதல் குருநானக் கல்லூரி வரை இணைப்பு சிற்றுந்துகள் நாளை முதல் இயக்கப்படும் - மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு


சென்னை-ஆலந்தூர் முதல் குருநானக் கல்லூரி வரை இணைப்பு சிற்றுந்துகள் நாளை முதல் இயக்கப்படும் - மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு
x

சென்னை ஆலந்தூர் முதல் வேளச்சேரி குருநானக் கல்லூரி வரை 2 மெட்ரோ இணைப்பு சிற்றுந்துகள் நாளை முதல் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னை,


மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-


மெட்ரோ ரெயில் பயணிகள் தங்களது இருப்பிடத்திலிருந்து மெட்ரோ நிலையத்திற்கு வந்து செல்வதற்கும் மெட்ரோ நிலையத்திலிருந்து அவர்கள் பணி செய்யும் இடத்திற்கு செல்வதற்கும் பல்வேறு இணைப்புச் சேவைகளை ஏற்படுத்த சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. அதில் மாநகர் போக்குவரத்துக் கழகத்துடன் இணைந்து, இணைப்பு பேருந்து வசதிகளை ஏற்படுத்துவதற்காக ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து குருநானக் கல்லூரி வரை வரையிலான வழித்தடத்தில் 2 இணைப்புச் சிற்றுந்துகள் நாளை (டிச.14) முதல் இயக்கப்படவுள்ளது.


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 30.11.2021 அன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் 12 இணைப்பு சிற்றுந்துகளின் இயக்கத்தை காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். அதன்படி ஐந்து வழித்தடங்களில் 12 சேவைகள் இயக்கப்படுகின்றன. அதில் சுமார் 13.41 லட்சம் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பயணம் செய்து வருகின்றனர்.


சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் 06.08.2022 அன்று அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக, சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் 10 இணைப்பு சிற்றுந்துகளின் இயக்கத்தினை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


இதன் தொடர்ச்சியாக, பொதுமக்கள் மற்றும் மெட்ரோ பயணிகளின் வசதிக்காக அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து வேளச்சேரி குருநானக் கல்லூரி வரை (ஆதம்பாக்கம் காவல் நிலையம் வழியாக) 2 இணைப்பு சிற்றுந்துகள் நாளை (டிச.14) முதல் இயக்கப்படவுள்ளது. இந்த இணைப்பு சிற்றுந்து சேவை திங்கள் முதல் வெள்ளி வரை ஆலந்தூரில் காலை 5.25 மணி முதல் இரவு 8.57 மணி வரையிலும், குருநானக் கல்லூரியில் காலை 5.55 மணி முதல் இரவு 8.29 மணி வரையிலும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சேவை 35 நிமிட இடைவெளியில் இயங்கும்.


பேருந்து நிறுத்தங்கள்: அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ, ரயில்வே நிலையம் சாலை, எஸ்பி மருத்துவமனை, கிழக்கு கரிகுளம் 1-வது தெரு, வள்ளலார் செயின்ட் ஏரிக்கரை தெரு, ஜெயலட்சுமி தியேட்டர் புதிய காலனி மெயின் ரோடு, ஆதம்பாக்கம் காவல் நிலையம், கக்கன் பாலம், பிருந்தாவன் நகர், சக்தி நகர், பாலாஜி நகர், புழுதிவாக்கம் ரயில்வே நிலையம், வேளச்சேரி ரயில்வே நிலையம், சென்னை சில்க்ஸ், வேளச்சேரி பிஎஸ் - தாண்டேஸ்வரம் - காந்தி சாலை - குருநானக் கல்லூரி


மாநகர் போக்குவரத்துக் கழகத்தின்படி, மேற்கூறிய இணைப்பு சிற்றுந்து சேவைக்கு விரைவு பேருந்து கட்டணம் செல்லுபடியாகும். 9 கி.மீ, பயணத்திற்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.7 அதிகபட்ச கட்டணம் ரூ.15. இதனால் பயணிகளும் பொதுமக்களும் மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து அவர்களது இருப்பிடம் மற்றும் அலுவலகங்களுக்கு எளிதில் சென்றடைந்து பயன்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இதுபோன்று பயணிகள் வசதிகளை தொடர்ந்து செய்து வர உத்தேசித்துள்ளது.


இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story