சென்னை கார் டிரைவர் எரித்துக்கொலை: போலீஸ்காரர் உள்பட 2 பேர் நெல்லை கோர்ட்டில் சரண்


சென்னை கார் டிரைவர் எரித்துக்கொலை: போலீஸ்காரர் உள்பட 2 பேர் நெல்லை கோர்ட்டில் சரண்
x

செங்கல்பட்டு அருகே கார் டிரைவர் எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்ட போலீஸ்காரர் உள்பட 2 பேர் நெல்லை கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

நெல்லை,

சென்னை கே.கே.நகர் விஜயராகவபுரம் காமராஜர் தெரு 5-வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் ரவி (வயது 26). இவர் எம்.எம்.டி.ஏ. காலனியில் உள்ள ஒரு இரும்புபொருட்கள் விற்பனை செய்யும் கடையில் டிரைவராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி ஐஸ்வர்யா (23). இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது.

கடந்த 30-ந் தேதி ரவியை 5 பேர் கொண்ட கும்பல், போலீஸ் எனக்கூறி விசாரணைக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் அவர் திரும்பி வரவில்லை.

மனைவி போலீசில் புகார்

இதுகுறித்து ரவி மனைவி ஐஸ்வர்யா கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், தனது வீட்டின் அருகே செம்பியம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றும் செந்தில்குமார் என்பவர் கள்ளக்காதலி கவிதாவுடன் வசித்து வந்தார். செந்தில்குமாருடன் சேர்ந்து எனது கணவர் ரவி தினமும் மது அருந்தி வந்தாா். எங்களது குழந்தை, செந்தில்குமாரின் வீட்டின் அருகே சிறுநீர் கழித்ததால், பிரச்சினை ஏற்பட்டது.

அப்போது ரவியை செந்தில்குமார் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். எனது கணவர் ரவி காணாமல் போன அடுத்த நாளே செந்தில்குமார் வீட்டைக்காலி செய்துவிட்டு சென்று இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி எனது கணவரை மீட்டு தர வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.

செல்போன் சிக்னல்

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் போலீஸ்காரர் செந்தில்குமார் கடந்த 28-ந் தேதி முதல் பணிக்கு வரவில்லை என்று தெரியவந்தது.

இதனால் சந்தேகமடைந்த போலீசார், தனிப்படை அமைத்து காணாமல் போன செந்தில்குமார், அவரது கள்ளக்காதலி கவிதா ஆகியோரின் செல்போன் எண்களை வைத்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர்களது செல்போன் சிக்னல் செங்கல்பட்டு பழமத்தூர் கிராமத்தின் காட்டுப்பகுதியில் ஸ்விட்ச் ஆப் ஆனது கண்டுபிடிக்கப்பட்டது.

எரித்துக்கொலை

இதற்கிடையே, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே படாளம் போலீசார் எரிந்த நிலையில் ரவியின் உடலை கண்டெடுத்தனர். இதையடுத்து செந்தில்குமாரின் கள்ளக்காதலி கவிதாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது, கடந்த 30-ந் தேதி செந்தில்குமார் அவரது நண்பர்கள் ஐசக், எட்வின் உள்பட 5 பேர் கொண்ட கும்பலுடன் சென்று ரவியை சரமாரியாக அடித்து உதைத்ததில் மயங்கினார். பின்னர் அவரை தூக்கிச் சென்று செங்கல்பட்டு மதுராந்தகம் அருகே காட்டுப்பகுதியில் வைத்து பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்தது தெரியவந்தது.

தொடர்ந்து போலீசார் தலைமறைவான செந்தில்குமார், ஐசக், எட்வின் உள்பட 5 பேரை தேடிவந்தனர்.

கோர்ட்டில் சரண்

இந்த நிலையில் போலீஸ்காரர் செந்தில்குமார், நெல்லை மாவட்டம் திருவிருத்தான்புளி பிள்ளைகுளத்தை சேர்ந்த துரைப்பாண்டி மகன் ஐசக் (31) ஆகிய 2 பேரும் நேற்று நெல்லை 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

மாஜிஸ்திரேட்டு ஆறுமுகம் விசாரணை நடத்தி, 2 பேரையும் சிறையில் அடைக்கவும், 16-ந் தேதி செங்கல்பட்டு முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து 2 பேரும் பலத்த பாதுகாப்புடன் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story