சென்னை காவல் துறையில் ரூ.3.60 கோடி செலவில் டிரோன் போலீஸ் பிரிவு


சென்னை காவல் துறையில் ரூ.3.60 கோடி செலவில் டிரோன் போலீஸ் பிரிவு
x

டிரோன் போலீஸ் பிரிவை தொடங்கி வைத்த டி.ஜி.பி. சைலேந்திரபாபு அவற்றின் செயல்பாட்டை பார்வையிடும் காட்சி. அருகில் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட அதிகாரிகள் உள்ளனர்.

சென்னை

சென்னை காவல்துறையில் ரூ.3.60 கோடி செலவில் டிரோன் போலீஸ் பிரிவை தொடங்கி வைத்து, டி.ஜி.பி. சைலேந்திரபாபு பரபரப்பாக பேசினார்.

டிரோன் பிரிவு

சென்னை காவல்துறையில் ரூ.3.60 கோடி செலவில் டிரோன் போலீஸ் பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. சென்னை அடையாறில் இதன் செயல் அலுவலகம் உள்ளது. முதல் கட்டமாக 9 டிரோன்கள் இதற்காக வாங்கப்பட்டு உள்ளது. இதன் தொடக்க விழா நேற்று காலை நடந்தது. போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் முன்னிலையில், இந்த புதிய டிரோன் பிரிவை டி.ஜி.பி. சைலேந்திரபாபு தொடங்கி வைத்தார். டி.ஜி.பி. பணியில் இருந்து ஓய்வு பெறும் நிலையில் நேற்று அவர் பரபரப்பாக பேசினார். அவர் பேசுகையில் கூறியதாவது:-

தமிழ்நாடு காவல் துறையை நவீனப்படுத்த வேண்டும் என்பது முதல்-அமைச்சரின் கனவு திட்டமாகும். அதன்படி தொழில்நுட்ப ரீதியாகவும், திறன் மேம்பாட்டு ரீதியாகவும் காவல்துறையை வலுப்படுத்துவதற்காக திட்டமிட்டு முதல்-அமைச்சர் செயல்படுகிறார். அவர் சட்டசபையில் அறிவிப்பு வெளியிட்டதன் அடிப்படையில் இந்த டிரோன் போலீஸ் பிரிவு தொடங்கப்பட்டு உள்ளது.

3 வகை செயல்பாடு

டிரோன் பிரிவு 3 வகையாக செயல்படும். ஒரு பிரிவு சென்னையில் மெரினா போன்ற இடங்களில் உயிரிழப்பு ஏற்படாமல் தடுக்கும் வகையில் கண்காணித்து செயல்படும். இது அதிக எடையை தூக்கும் விதமாக இருக்கும். மேலும் இதுபோன்ற டிரோன்கள் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் இடங்களுக்கு, கண்ணீர் புகைகுண்டுகள் போன்றவற்றை உடனடியாக எடுத்து செல்வதற்கு உதவும். 2-வது பிரிவு ஒரு இடத்தில் குற்றம் நடந்து விட்டது, குற்றவாளிகளை உடனே பிடிக்க வேண்டும் என்றால் வேகமாக விரைந்து சென்று இந்த டிரோன்கள் உதவும். அடுத்து 3-வதாக ஆவடி, தாம்பரம் போன்ற நீண்ட தூரங்களுக்கு செல்வதற்கும் இது உதவும்.

விபத்து தடுப்பு படை

முதல்-அமைச்சர் உத்தரவின் பேரில் கூடுதல் டி.ஜி.பி. வினித்வான்கடே தலைமையில் விபத்து தடுப்பு படை ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. இந்த அமைப்பு ஐ.ஐ.டி. நிபுணர்கள் உதவியோடு, தமிழகம் முழுவதும் எந்தெந்த இடங்களில் விபத்து ஏற்படுகிறது என்பதை வரைபடம் மூலம் கண்டறிந்து, விபத்துக்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா, இணை கமிஷனர் சிபிசக்கரவர்த்தி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story