வழக்குகளை விரைந்து முடிப்பதில் நாட்டிலேயே சென்னை ஐகோர்ட்டு முதலிடம்


வழக்குகளை விரைந்து முடிப்பதில் நாட்டிலேயே சென்னை ஐகோர்ட்டு முதலிடம்
x

வழக்குகளை விரைந்து முடிப்பதில் நாட்டிலேயே சென்னை ஐகோர்ட்டு முதலிடம் வகிப்பதாக கோவையில் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி தெரிவித்தார்.

கோயம்புத்தூர்


வழக்குகளை விரைந்து முடிப்பதில் நாட்டிலேயே சென்னை ஐகோர்ட்டு முதலிடம் வகிப்பதாக கோவையில் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி தெரிவித்தார்.

நீதித்துறை விருந்தினர் மாளிகை

கோவை ரேஸ்கோர்சில் உள்ள தமிழ்நாடு மாநில நீதித்துறை பயிலக மண்டல மைய வளாகத்தில் ரூ.2.39 கோடியில் 3 மாடி கொண்ட நீதித்துறை விருந்தினர் மாளிகை கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி கலந்துகொண்டு ரிப்பன் வெட்டியும், குத்துவிளக்கேற்றியும் விருந்தினர் மாளிகையை திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நான் சென்னை ஐகோர்ட்டு தலைமை பொறுப்பு நீதிபதியாக இருந்தபோது, சென்னை விமான நிலையத்தில் தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை சந்தித்தேன். அப்போது அவர் என்னிடம் நீதித்துறைக்கு என்ன தேவைப்படுகிறது என்று கேட்டார். அப்போது நான் நீதித்துறைக்கு என்னென்ன தேவை என்பது குறித்து அவரிடம் கூறினேன். இதையடுத்து அவர் முதல்-அமைச்சருடன் கலந்து பேசி நிதிநெருக்கடியின் மத்தியிலும் நீதித்துறைக்கு ரூ.1400 கோடி ஒதுக்கீடு செய்தார்.

சென்னை ஐகோர்ட்டுக்கு முதலிடம்

சென்னை ஐகோர்ட்டு வழக்குகளை முடித்து வைக்கும் சதவீதம் 109 ஆக உள்ளது. இதன்மூலம் வழக்குகளை விரைந்து முடிப்பதில் நாட்டிலேயே சென்னை ஐகோர்ட்டு முதலிடம் வகிக்கிறது. இதனை சென்னையில் நடைபெற்ற தலைமை நீதிபதிகள் மாநாட்டில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பாராட்டி உள்ளார். தமிழக அரசின் உதவியில்லாமல் இது சாத்தியமாகி இருக்காது.

நீதித்துறைக்கு தேவையான நீதிபதிகளில் 3-ல் ஒரு பங்கு நீதிபதிகள் பணியிடங்களே இருக்கும் நிலையிலும் வழக்குகளை விரைந்து முடித்து வருகிறோம். நீதிபதிகளும் வக்கீல்களும் ஒன்றிணைந்து வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மயங்கி விழுந்த பெண்

முன்னதாக விழாவில் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி பேசிக்கொண்டிருந்தபோது, மேடையின் அருகே நின்றுகொண்டு இருந்த கோவை கோர்ட்டு பெண் ஊழியர் திடீரென மயங்கி விழுந்தார். மேலும் அவர் கர்ப்பிணியாக இருப்பதும் தெரியவந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அருகே இருந்த அறைக்கு கொண்டு சென்றனர். அப்போது, மேடையில் இருந்த கலெக்டர் சமீரன் விரைந்து வந்து அந்த பெண்ணுக்கு முதலுதவி அளித்தார். இதையடுத்து அவருக்கு மயக்கம் தெளிந்தது. காலையில் சாப்பிடாமல் இருந்ததால் அவர் மயங்கி விழுந்தது தெரியவந்தது. நிகழ்ச்சி நிறைவடைந்ததும் பெண் ஊழியரை நேரில் சந்தித்து ஐகோர்ட்டு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி ஆறுதல் கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

விழாவில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் பரேஷ் உபாத்யா, ஜி.ஆர்.சுவாமிநாதன், கோவை மாவட்ட முதன்மை நீதிபதி ராஜசேகர், கலெக்டர் சமீரன், மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் மற்றும் நீதிபதிகள், வக்கீல்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு முதன்மை நீதிபதி சஞ்சீவி பாஸ்கர் நன்றி கூறினார்.


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தலைமை நீதிபதி பாராட்டு

விழாவில் பேசிய ஐகோர்ட்டு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வெகுவாக பாராட்டி பேசினார். அப்போது, தமிழக முதல்-அமைச்சரின் சீரிய முயற்சியால் நீதித்துறை கட்டுமானங்கள் வேகமெடுத்து வருகின்றன. சென்னை ஐகோர்ட்டுக்கு 7 ஏக்கரில் இடத்தை வழங்குவது தொடர்பாக பல ஆண்டுகளாக பிரச்சினை இருந்து வந்்தது. இதனை முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றதும், ரூ.500 கோடி மதிப்பிலான அந்த இடத்தை புதிய நீதிமன்றம் கட்ட வழங்கி நடவடிக்கை எடுத்தார். அதுமட்டுமல்லாமல் அங்கு நீதிமன்ற கட்டிடம் கட்ட ரூ.350 கோடி ஒதுக்கீடு செய்தார். மேலும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் 116 நீதிமன்ற அறைகள் கேட்டதில், அவர் 150 நீதிமன்ற அறைகள் கட்டுவதற்கு விரைவாக நிதி ஒதுக்க நடவடிக்கை எடுத்தார் என்று தெரிவித்தார்.


Next Story