சென்னை ஐ.ஐ.டி. 59-வது பட்டமளிப்பு விழா 2,084 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன


சென்னை ஐ.ஐ.டி. 59-வது பட்டமளிப்பு விழா 2,084 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன
x

சென்னை ஐ.ஐ.டி.யின் 59-வது பட்டமளிப்பு விழா, ஐ.ஐ.டி. வளாகத்தில் நேற்று நடந்தது.

சென்னை,

சென்னை ஐ.ஐ.டி.யின் 59-வது பட்டமளிப்பு விழா, ஐ.ஐ.டி. வளாகத்தில் நேற்று நடந்தது. இந்த விழாவுக்கு சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் வி.காமகோடி தலைமை தாங்கினார். ஆட்சி மன்றக்குழு தலைவர் பவன் கோயங்கா முன்னிலை வகித்தார். டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

பட்டமளிப்பு விழாவில், 423 பி.டெக்., 454 இரட்டை பட்டப்படிப்பு, 401 எம்.டெக்., 112 எம்.எஸ்சி., 38 எம்.ஏ., 38 எக்ஸ்கியூட்டிவ் எம்.பி.ஏ., 68 எம்.பி.ஏ., 179 எம்.எஸ்., 306 ஆராய்ச்சி படிப்பு உள்பட பல்வேறு படிப்புகளில் தேர்ச்சி பெற்ற 2 ஆயிரத்து 84 மாணவ- மாணவிகளுக்கு பட்டங்களை (இணை, இரட்டை பட்டப்படிப்புகள் உள்பட) சிறப்பு விருந்தினர் என்.சந்திரசேகரன், சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் வி.காமகோடி ஆகியோர் வழங்கினர்.

மேலும், இந்திய ஜனாதிபதி விருது மாணவர் மொகித் குமாருக்கும், ஸ்ரீ வி.ஸ்ரீனிவாசன் நினைவு விருது சி.கவுதமுக்கும், டாக்டர் சங்கர்தயாள் சர்மா விருது பிரஜ்வால் பிரகாசுக்கும், கவர்னர்கள் விருது சாத்விக்குக்கும் வழங்கப்பட்டன.

விழாவில் சிறப்பு விருந்தினர் என்.சந்திரசேகரன் பேசியதாவது:-

அடுத்த 20 ஆண்டுகளில் சுகாதாரத் துறையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல் போன்ற தொழில்நுட்பங்கள் இல்லாமல் எதிர்காலத்தில் தொழில் வளர்ச்சி உள்பட எந்த வளர்ச்சியும் சாத்தியமில்லை. சுகாதார பாதுகாப்பு, உயிரியியல், சுகாதார தொழில்நுட்பம் ஆகிய துறைகள் அடுத்த 10 முதல் 20 ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியை எதிர்கொள்ளும்.

வேலைவாய்ப்பின்மை, ஊட்டச்சத்து குறைபாடு, தண்ணீர் பிரச்சினை, தரமான கல்வி, தரமான சுகாதாரம் கிடைக்காமல் இருப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் இந்தியாவில் இருப்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்.

இருப்பினும் பிரச்சினைகளுக்கு இணையாக பல்வேறு வாய்ப்புகள் நம் நாட்டில் உள்ளது. இந்திய நிறுவனங்களுக்கு உலகளவில் பெரும் மதிப்பு இருக்கிறது. அத்தகைய வாய்ப்புகளை வருங்கால தலைமுறையினர் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story