சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே போலீஸ் வாகன சோதனையில் 2 கிலோ தங்கம் பறிமுதல்


சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே போலீஸ் வாகன சோதனையில் 2 கிலோ தங்கம் பறிமுதல்
x

சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே போலீஸ் வாகன சோதனையில் 2 கிலோ தங்கத்தை வீசிவிட்டு தப்பி ஓடிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை

வாகன சோதனை

சென்னை பாரிமுனை ராஜாஜி சாலையில், மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே வடக்கு கடற்கரை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக பாரிமுனையில் இருந்து மண்ணடி நோக்கி வந்த ஒரு ஆட்டோவை மடக்கி சோதனை செய்தனர்.

அப்போது ஆட்டோவில் இருந்த ஒரு வாலிபர், கையில் இருந்த ஒரு பார்சலுடன் கீழே இறங்கி தப்பி ஓடினார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், வாலிபரை விரட்டிச்சென்றனர். உடனே அந்த வாலிபர், கையில் இருந்த பார்சலை கீழே வீசிவிட்டு, கடற்கரை ரெயில் நிலையத்துக்குள் சென்று, அங்கிருந்து மெதுவாக புறப்பட்டு சென்று கொண்டிருந்த மின்சார ரெயிலில் ஏறி தப்பிச்சென்றுவிட்டார்.

2 கிலோ தங்கம்

இதையடுத்து போலீசார் அந்த வாலிபர் வீசி சென்ற பார்சலை தேடி எடுத்து பிரித்து பார்த்தனர். அதில் 2 கிலோ தங்க கட்டிகள் இருப்பது தெரிந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் துறைமுக உதவி கமிஷனர் வீரக்குமார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார். அந்த ஆட்டோ டிரைவரிடம் விசாரித்தபோது, அந்த வாலிபரை பாரிமுனையில் இருந்து மண்ணடிக்கு சவாரி அழைத்துச் சென்றதாக கூறினார்.

கடத்தல் தங்கமா?

மேலும் இதுபற்றி வடக்கு கடற்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய வாலிபர் யார்?. எதற்காக தங்கத்தை வீசி சென்றார்?. அது கடத்தல் தங்கமா? அல்லது கொள்ளையடிக்கப்பட்டதா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தப்பி ஓடிய வாலிபரை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.


Next Story