கல்குவாரி குட்டையில் மூழ்கிய சென்னை மாணவன் பிணமாக மீட்பு

கல்குவாரி குட்டையில் மூழ்கிய சென்னை மாணவன் பிணமாக மீட்கப்பட்டான்.
வாலாஜா
கல்குவாரி குட்டையில் மூழ்கிய சென்னை மாணவன் பிணமாக மீட்கப்பட்டான்.
சென்னை போரூரை அடுத்த காரம்பாக்கம் தர்மராஜா நகரில் வசிப்பவர் வெங்கடேசன். நகைக்கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவரது சொந்த ஊர் வாலாஜாவை அடுத்த அனந்தலை ஊராட்சிக்கு உட்பட்ட இட குப்பம் கிராமமாகும்.
இவரது மகன் கோகுல் பிரசாத் (வயது 14) போரூரில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். கோடை விடுமுறையையொட்டி சொந்த ஊரில் உள்ள உறவினர் வீட்டிற்கு கோகுல் பிரசாத் வந்திருந்தான்.
இந்நிலையில் வீட்டின் அருகே உள்ள பழைய கல்குவாரி குட்டையில் குளிப்பதற்காக கோகுல் பிரசாத் மற்றும் அவரது நண்பர்கள் உடன் சென்றனர். அப்போது நீரில் இறங்கி குளித்த அவன் நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கினான்.
நண்பர்கள் காப்பாற்ற முயற்சி செய்தபோது அவர்களால் முடியவில்லை. அவர்களது கூச்சல் கேட்டு கிராம மக்கள் அங்கு ஓடி வந்து வாலாஜா போலீசாருக்கும் ராணிப்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கும் தெரிவித்து விட்டு தேடும் பணியில் ஈடுபட்டனர்.
தீயணைப்புத் துறையினரும் தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் ஆகியும் சிறுவனின் உடல் கிடைக்கவில்லை. அதைத் தொடர்ந்து அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வரவழைக்கப்பட்டு நடத்திய தேடுதலில் கோகுல்பிரசாத்தை அவர்கள் பிணமாக மீட்டனர்.பிரேத பரிசோதனைக்கு அவனது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.இது குறித்த வாலாஜா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






