ரெயில் நிலையம் அருகே சென்னை வாலிபர் வெட்டிக் கொலை


ரெயில் நிலையம் அருகே சென்னை வாலிபர் வெட்டிக் கொலை
x

அரக்கோணம் ரெயில்நிலையம் அருகே சென்னையை சேர்ந்த வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராணிப்பேட்டை

வெட்டுக்காயத்துடன் வாலிபர்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரெயில் நிலையம் அருகே பழைய 8-வது பிளாட்பாரம் உள்ளது. தற்போது பயன்பாட்டில் இல்லாத இந்த பிளாட்பாரத்தையொட்டி அமைந்துள்ள ஏ.பி.எம். சர்ச் பகுதியில் வாலிபர் ஒருவர் வெட்டுக் காயங்களுடன் கிடப்பதாக அரக்கோணம் டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பலத்த காயங்களுடன் இருந்த வாலிபரை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னையை சேர்ந்தவர்

அதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து அரக்கோணம் டவுன் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இறந்த நபர் சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியை சேர்ந்த ஜான் பிராங்ளின் (வயது 29) என்பதும், கடந்த ஒரு மாதமாக ஏ.பி.எம். சர்ச் பகுதியில் உள்ள தனது பெரியம்மா வீட்டில் இருந்து வந்ததும் தெரியவந்தது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 11 மணி அளவில் சம்பவ இடத்தில் மர்ம நபர்கள் ஜான் பிராங்ளினை வெட்டி அந்த பகுதியில் வீசி விட்டு தப்பி சென்றதும் தெரியவந்தது.

போலீஸ் விசாரணை

அவரை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்பது தெரியவில்லை. இது குறித்து அரக்கோணம் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


Next Story