சென்னை: தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து


சென்னை:  தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து
x

சென்னை அருகே காட்டுப்பாக்கத்தில் மெட்ரோ ரெயில் பணிகளுக்கான இரும்பு தடுப்புகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை பூந்தமல்லி அருகே உள்ள காட்டுப்பாக்கத்தில் தனியார் ஃபேப்ரிகேஷன் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு சென்னை புறநகர்ப் பகுதிகளில் அமைக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் பணிக்கு பயன்படுத்தப்படும் இரும்பு தடுப்புகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த தொழிற்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இன்று காலை திடீரென தொழிற்சாலையின் கிழக்குப் பகுதியில், சேமிப்பு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து கிடங்கில் வைக்கப்பட்டிருந்த மரக்கட்டைகள், பெயிண்ட், கெமிக்கல் போன்ற பொருட்களில் தீ பரவியதை அடுத்து, தீ மளமளவென கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. இதுகுறித்து உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்துக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து பூந்தமல்லி தீயணைப்பு நிலையத்தில் இருந்து தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தீ கட்டுக்கடங்காமல் பயங்கரமாக எரிந்து வருவதால் விரர்கள் அணைக்க முடியாமல் போராடி வருகின்றனர்.

பின்னர் தீயைக் கட்டுப்படுத்த அருகில் உள்ள மதுரவாயல், அம்பத்தூர் தீயணைப்பு நிலையங்களில் இருந்தும் கூடுதலாக மூன்று தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தொடர்ந்து அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஸ்டோரேஜ் எனப்படும் கிடங்கு பகுதியில் மட்டுமே தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தொழிற்சாலை முழுவதுமாக இரும்பு தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதால், மற்ற பகுதிகளுக்கு தீ பரவாமல் வீரர்கள் கட்டுப்படுத்தினர்.


Next Story