சென்னிமலை, புஞ்சைபுளியம்பட்டி, பெருந்துறை பகுதிகளில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை; 15 ஆயிரம் வாழைகள் முறிந்து நாசம்


சென்னிமலை, புஞ்சைபுளியம்பட்டி, பெருந்துறை பகுதிகளில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை; 15 ஆயிரம் வாழைகள் முறிந்து நாசம்
x

சென்னிமலை, புஞ்சைபுளியம்பட்டி மற்றும் பெருந்துறை பகுதிகளில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் 15 ஆயிரம் வாழைகள் முறிந்து நாசம் ஆனது.

ஈரோடு

சென்னிமலை, புஞ்சைபுளியம்பட்டி மற்றும் பெருந்துறை பகுதிகளில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் 15 ஆயிரம் வாழைகள் முறிந்து நாசம் ஆனது.

வாழைகள் முறிந்தன

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள எக்கட்டாம்பாளையம், எல்லைகிராமம், பசுவபட்டி, புதுப்பாளையம் ஆகிய ஊராட்சி பகுதிகளில் அதிக அளவில் வாழைகளை விவசாயிகள் பயிரிட்டு உள்ளனர். இகுலைகள் தள்ளி இன்னும் ஒரு மாதத்தில் வாழைத்தார்கள் அறுவடை செய்யும் நிலையில் இருந்தது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னிமலை பகுதியில் பலத்த சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் விவசாயிகள் பயிரிட்டிருந்த சுமார் 5 ஆயிரம் வாழைகள் முறிந்து விழுந்து நாசம் ஆனது.

நஷ்டம்

இதுகுறித்து அய்யம்பாளையத்தை சேர்ந்த விவசாயி ஜி.கதிரேசன் என்பவர் கூறுகையில், 'என்னுடைய 2 ஏக்கர் நிலத்தில் 1,500 செவ்வாழைகள் பயிரிட்டு இருந்தேன். இன்னும் ஒரு மாதத்தில் வாழைத்தார்கள் அறுவடை செய்ய உள்ள நிலையில் சூறவாளிக்காற்றால் சுமார் 750 வாழைகள் முறிந்து விழுந்தன. இதேபோல் புதுப்பாளையம், எல்லைக்குமாரபாளையம், மேட்டூர் ஆகிய இடங்களில் பயிரிடப்பட்டிருந்த சுமார் 4 ஆயிரம் வாழைகளுக்கு மேல் முறிந்து விழுந்து உள்ளன. வாழைகள் பராமரிப்பிற்காக நாங்கள் லட்சக்கணக்கில் செலவு செய்துள்ளோம். ஆனால் வாழைகள் முறிந்து விழுந்ததால் செய்த செலவு அத்தனையும் வீணாகிவிட்டது. எங்களுக்கு பெருத்த நஷ்டமும் ஏற்பட்டு உள்ளது,' என்றார்.

புஞ்சைபுளியம்பட்டி

புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள புங்கம்பள்ளி, கீரியப்பம்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை 3 மணி முதல் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை 30 நிமிடம் நீடித்தது.

இதன்காரணமாக கீரியப்பம்பாளையம் பகுதியில் பயிரிடப்பட்டிருந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் முறிந்து சேதம் ஆனது.

பெருந்துறை

இதேபோல் பெருந்துறையை அடுத்த தோரணவாவி ராசாக்கவுண்டன்பாளையம் சில்லாங்காட்டு தோட்டம் பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பலத்த சூறாவளிக்காற்றுடன் மழை பெய்தது.

இதில் அந்த பகுதியில் பயிரிடப்பட்டிருந்த 7 ஆயிரத்து 800 வாழைகள் முறிந்து விழுந்து சேதம் ஆனது.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ராசாக்கவுண்டன்பாளையத்துக்கு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, சென்று முறிந்து விழுந்த வாழைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கொட்டித்தீர்த்த மழை

அந்தியூரை அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் கடந்த சில வாரங்களாக வெயில் வாட்டியது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பர்கூர் மலைப்பகுதியில் கோடை மழை பெய்தது. இதேபோல் நேற்றும் பலத்த மழை பெய்தது. மதியம் 12 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை 1 மணி வரை கொட்டித்தீர்த்தது. தொடர்ந்து 2-வது நாளாக மழை பெய்ததால் பர்கூர் மலைப்பகுதியில் குளிர்ந்த காற்று வீச தொடங்கியது. இந்த கோடை மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

இதேபோல் பவானிசாகர் மற்றும் தாளவாடியை அடுத்த கொங்கள்ளி, பனக்கள்ளி, மல்லைன்புரம், கல்மண்டிபுரம் பெளத்தூர், தலமலை, திம்பம், ஆசனூர், ஆகிய பகுதிகளில் 30 நிமிடம் மிதமான மழை பெய்தது.

மேலும் கல்மண்டிபுரமத்தில் சூறாவளிக்காற்றுடன் மழை பெய்தது. இதில் அந்த பகுதியில் பயிரிடப்பட்டிருந்த 100 வாழைகள் முறிந்து விழுந்து சேதம் ஆனது.


Next Story