வாணியம்பாடியில் செஸ் விழிப்புணர்வு ஓவியம்


வாணியம்பாடியில் செஸ் விழிப்புணர்வு ஓவியம்
x

வாணியம்பாடியில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செஸ் விழிப்புணர்வு ஓவியம் வரையப்பட்டது.

திருப்பத்தூர்

வாணியம்பாடி

வாணியம்பாடியில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செஸ் விழிப்புணர்வு ஓவியம் வரையப்பட்டது.

சர்வதேச அளவிலான 188 நாடுகள் பங்கு பெறும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி முதல் ஆகஸ்ட் 10-ந் தேதி வரை நடக்கிறது. இதில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனையொட்டி வாணியம்பாடி நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள தார் சாலையில் 720 சதுர அடி அளவில் பிரமாண்ட செஸ் ஓவியம் வரையப்பட்டு, போட்டியை ஊக்குவிக்கும் வகையில் "நம்ம செஸ், நம்ம நகரம், நம்ம பெருமை" என்ற வாசகங்கள் எழுதப்பட்டுள்ளது. ஓவியம் வரையும் பணி நிறைவு பெற்றதை தொடர்ந்து, ஓவியத்தை நேரில் பார்வையிட்ட வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா ஓவியத்தை தத்ரூபமாக வரைந்த ஓவியர் கோபு, விமல் மற்றும் ராமு உள்ளிட்டோருக்கு பாராட்டுகளை தெரிவித்ததோடு, தலைமை ஓவியர் கோபுவிற்கு புத்தகம் ஒன்றை பரிசாக வழங்கினார்.

அப்பொழுது, பொதுமக்கள் மத்தியில், வாணியம்பாடி நகராட்சி ஆணையாளர் ஸ்டான்லி பாபு பேசுகையில், ''செஸ் போட்டியில் திறமை வாய்ந்த நபர்கள் இதுபோன்ற வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி தங்களது திறமையை வெளிப்படுத்த வேண்டும். அந்த வகையில், வாணியம்பாடி பகுதியில் உள்ள சிறந்த செஸ் வீரர்களை கண்டறிய வருகின்ற 21-ந் தேதி (வியாழக்கிழமை) வட்டார அளவிலான செஸ் போட்டி நடக்கிறது. இதில் வெற்றி பெறுகின்ற வீரர்கள் 25-ந் தேதி மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொள்ளலாம்" என்றார்.

விழிப்புணர்வை ஏற்படுத்த பிரமாண்ட அளவில் வரையப்பட்ட செஸ் ஓவியத்தை நகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.


Next Story