செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு நிகழ்ச்சி- கலெக்டர் செந்தில்ராஜ் பங்கேற்பு


செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு நிகழ்ச்சி-  கலெக்டர் செந்தில்ராஜ் பங்கேற்பு
x

தூத்துக்குடியில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கலெக்டர் செந்தில்ராஜ் பேசினார்

தூத்துக்குடி

தூத்துக்குடியில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கலெக்டர் செந்தில்ராஜ் பேசினார்.

விழிப்புணர்வு நிகழ்ச்சி

தூத்துக்குடி தருவை மைதானத்தில் நேற்று ஸ்குவாஷ் விளையாட்டு வீரர்களுக்கு செஸ் ஒலிம்பியாட் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் செந்தில்ராஜ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

சென்னை மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடக்கிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டி பற்றி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு விதமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தமிழ்நாடு அரசு சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதில் மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொள்கின்றனர்.

மாணவ-மாணவிகள் தேர்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து தலா 2 மாணவ-மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு சென்னையில் நடக்க உள்ள 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பார்வையாளராக கலந்து கொள்ள அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள். நீங்களும் வளர்ந்து செஸ் போட்டியில் கலந்து கொள்ளலாம். சென்னையில் செஸ் போட்டி நடைபெறுவது பெருமையாகும். சென்னை மாமல்லபுரத்தில் சிறப்பு சதுரங்க விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டு உள்ளது.

செஸ் விளையாடுங்கள்

மாணவர்களாகிய நீங்கள் ஆர்வம் இருப்பதை படிக்கலாம், விளையாடலாம். படிப்பாக இருந்தாலும், விளையாட்டாக இருந்தாலும் தொடர்ந்து முயற்சிகள் செய்ய வேண்டும். செஸ் விளையாடினால் ஞாபகசக்தி, திட்டமிடுதல் உள்ளிட்ட பல்வேறு வகையான திறமைகளும், அனுபவங்களும் கிடைக்கும். எனவே எல்லோரும் செஸ் விளையாடுங்கள். தெரியாவிட்டால் கற்றுக்கொள்ளுங்கள். நாம் எங்கிருந்தாலும் சாதிக்க முடியும். மாவட்ட அளவிலான ஸ்குவாஷ் விளையாட்டு போட்டியில் நீங்கள் சாதிப்பதற்கு என்னுடைய வாழ்த்துகள்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி உதவி கலெக்டர் சிவசுப்பிரமணியன், மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அலுவலர் ரத்தினராஜ், தூத்துக்குடி தாசில்தார் செல்வக்குமார், பயிற்சியாளர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story