செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு நிகழ்ச்சி
செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரபலப்படுத்தும் விதமாக குத்தாலம், வைத்தீஸ்வரன் கோவிலில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
இந்தியாவில் அதுவும் தமிழகத்தில் நடக்கும் இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியை பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகளிடம் கொண்டு சேர்க்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.
எம்.எல்.ஏ. செஸ் விளையாடினார்
இதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு ஒன்றியக்குழு தலைவர் மகேந்திரன் தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர் சங்கீதா மாரியப்பன், முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா, பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கியராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். உடற்கல்வி ஆசிரியர் காந்திமதி வரவேற்றார். இதில், சிறப்பு அழைப்பாளராக பூம்புகார் எம்.எல்.ஏ. நிவேதாமுருகன் கலந்து கொண்டு மாணவர்களுடன் சேர்ந்து செஸ் விளையாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது மாவட்ட சுற்றுச்சூழல் அமைப்பாளர் சவுமியன், குத்தாலம் ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் திருமணஞ்சேரி மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
செஸ் போர்டு வடிவில்...
இதேபோல, சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி தலைவர் பூங்கொடி அலெக்சாண்டர் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் அசோகன், துணைத்தலைவர் அன்புச்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் பிச்சுமணி வரவேற்று பேசினார். இதில், செஸ் போர்டு போல கருப்பு-வெள்ளை நிறத்தில் கட்டங்கள் வரையப்பட்டு அதில் மாணவர்கள் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.