செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு விழா இன்று நடக்கிறது: முதல்-அமைச்சர் பரிசுகளை வழங்குகிறார்


செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு விழா இன்று நடக்கிறது: முதல்-அமைச்சர் பரிசுகளை வழங்குகிறார்
x

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா 600 கலைஞர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று நடக்கிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுகளை வழங்குகிறார்.

சென்னை,

186 நாடுகள் பங்கேற்றுள்ள 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்து வருகிறது. இதன் தொடக்க விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கடந்த மாதம் 28-ந்தேதி பிரமாண்டமாக நடந்தது. தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். மறுநாளில் இருந்து செஸ் போட்டிகள் மாமல்லபுரத்தில் தொடர்ந்து நடந்து வருகின்றன. போட்டிகள் இன்றுடன் நிறைவடைகிறது.

இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட்டின் கோலாகலமான நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6.30 மணிக்கு நடக்கிறது.

விழாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று வெற்றிபெறும் செஸ் விளையாட்டு வீரர்-வீராங்கனைகளுக்கு பரிசுகளை வழங்கி கவுரவிக்கிறார். சிறப்பு விருந்தினராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.டோனி, சர்வதேச செஸ் கூட்டமைப்பு தலைவர் அர்கடி துவார்கோவிச், முன்னாள் செஸ் உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் அமைச்சர்கள், செஸ் சம்மேளன நிர்வாகிகள் கலந்துகொள்கிறார்கள்.

600 கலைஞர்கள் பங்கேற்கும்

முன்னதாக ஒரு மணி நேரத்திற்கு மேலாக கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. 600 கலைஞர்கள் பல்வேறு கண்கவர் நடனம் மற்றும் இசை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர். இதற்கான இறுதிகட்ட ஒத்திகை நேற்று நடைபெற்றது.

இதையொட்டி நேரு உள்விளையாட்டு அரங்கமானது செஸ் காய்களை கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு அரங்கத்தின் உள்ளே செல்லும் நுழைவு வாயில்களில் தங்கநிற அலங்கார மாலைகள் தொங்கவிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாலையின் நுனியிலும் செஸ் விளையாட்டில் பயன்படுத்தப்படும் ராஜா, ராணி, மந்திரி, யானை, குதிரை, சிப்பாய் உள்ளிட்ட காய்கள் ஒட்டப்பட்டுள்ளன. நேரு உள்விளையாட்டு அரங்கில் எந்த திசையில் பார்த்தாலும் செஸ் விளையாட்டை பிரதிபலிக்கும் வகையில் அலங்கார தோரணங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. நிறைவு விழாவுக்கான அழைப்பிதழ் செஸ் காய்களில் ஒன்றான குதிரை வடிவில் அச்சிடப்பட்டுள்ளது.

இதனால் தொடக்க விழாவை போன்று நிறைவு விழாவும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அகண்ட திரைகள்

இந்த கண்கவர் கலை நிகழ்ச்சிகளை பார்வையாளர்கள் எளிதாக பார்த்துக்கொள்ளும் வகையில், நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு உள்ளேயே மேடையை ஒட்டி இருபுறமும் 2 ராட்சத வடிவிலான எல்.இ.டி. அகண்ட திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், மேடையின் வலது மற்றும் இடது புறங்களில் உள்ள காலரிகளில் பெரிய அளவிலான தலா 3 எல்.இ.டி. அகண்ட திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இவற்றை தவிர்த்து, மேடையின் வலது புறம் மற்றும் இடது புறம் உள்ள காலரியின் கீழ் பகுதிகளில் சுமார் 10-க்கும் மேற்பட்ட அகண்ட திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.


Next Story