செஸ் ஒலிம்பியாட்: கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு


செஸ் ஒலிம்பியாட்: கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
x

செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சிக்கான கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதாரத்துறை வெளியிட்டது.

சென்னை,

மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச"செஸ் ஒலிம்பியாட்" போட்டி வருகிற 28-ந்தேதி தொடங்கி ஆகஸ்டு மாதம் 10-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக பூஞ்சேரியில் உள்ள "போர் பாயிண்ட்ஸ்" அரங்கத்தில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

இதில் 188 நாடுகளை சேர்ந்த செஸ் வீரர்கள், வீராங்கனைகள் உள்ளிட்ட 2,500க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர். போட்டியில் பங்கேற்க வருபவர்களுக்கு வரவேற்பு, விருந்தோம்பல், கலைநிகழ்ச்சி, தங்கும்வசதி, உணவு, உபசரித்தல், போக்குவரத்து, பாதுகாப்பு, நிறைவுவிழா உள்ளிட்டவைகளை கவனிக்க தமிழக அரசு சார்பில் 18 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் தீவிரமாக கண்காணித்து போட்டிக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

இந்த சூழலில் ஜூலை 19ஆம் தேதி பிரதமர் மோடியை நேரில் சந்தித்து செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா அழைப்பிதழ் வழங்கப்பட உள்ளது. திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, அமைச்சர் மெய்யநாதன், தலைமை செயலர் இறையன்பு ஆகியோர் அழைப்பிதழை வழங்க உள்ளனர்.

இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சிக்கான கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதாரத்துறை வெளியிட்டது. இதன்படி வீரர்கள், தங்கும் விடுதிகள், விளையாட்டு நடைபெறும் அரங்கம், பார்வையாளர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் போன்றவை வெளியிடப்பட்டுள்ளன. மேலும் கொரோனா வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க சுகாதாரத்துறை சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய வீரர்கள் விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்த பிறகே விடுதியில் தங்க அனுமதிக்கப்படுவர். நட்சத்திர விடுதிகளில் நோய் தடுப்பு பணிகளை கண்காணிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்படுள்ளது. மேலும் பார்வையாளர்கள் தடுப்பூசி, முகக்கவசம், தனிமனித இடைவெளியை கடைபிடிக்க சுகாதாரத்துறை அறிவுத்தி உள்ளது.


Next Story