சென்னை நேப்பியர் பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரை செஸ் ஒலிம்பியாட் சிறப்பு ஓட்டம்


சென்னை நேப்பியர் பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரை செஸ் ஒலிம்பியாட் சிறப்பு ஓட்டம்
x

44-வது செஸ் ஒலிம்பியாட் சிறப்பு ஓட்டம் சென்னை நேப்பியர் பாலத்தில் இருந்து கலங்கரை விளக்கம் வரை நடந்தது. இதனை 3 அமைச்சர்கள் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.

சென்னை,

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற 28-ந்தேதி தொடங்க உள்ளது. இதை பிரபலப்படுத்த தமிழக அரசு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அந்தவகையில், 44-வது செஸ் ஒலிம்பியாட் சிறப்பு ஓட்டம் சென்னை நேப்பியர் பாலத்தில் இருந்து நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி கலங்கரை விளக்கம் வரை நடந்தது.

சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மற்றும் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.

மேயர்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், செய்தி மக்கள் தொடர்புத்துறை இணைந்து நடத்திய இந்த சிறப்பு ஓட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதி மாணவ-மாணவிகள், சதுரங்க விளையாட்டு வீரர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் வீ.ப.ஜெயசீலன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறை மற்றும் போக்குவரத்து துறையினர் இணைந்து செய்திருந்தனர்.

சைக்கிள் பேரணி

முன்னதாக த.வேலு எம்.எல்.ஏ. தலைமையில் 44-வது செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி கலங்கரை விளக்கம் முதல் நேப்பியர் பாலம் வரையிலும் நடந்தது.


Next Story