செஸ் ஒலிம்பியாட் ஜோதி தர்மபுரி வந்தது


செஸ் ஒலிம்பியாட் ஜோதி தர்மபுரி வந்தது
x

கோவையில் இருந்து தர்மபுரி வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதியை கலெக்டர் சாந்தி பெற்று கொண்டார்.

தர்மபுரி

கோவையில் இருந்து தர்மபுரி வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதியை கலெக்டர் சாந்தி பெற்று கொண்டார்.

செஸ் ஒலிம்பியாட்

சென்னை மாமல்லபுரத்தில் நாளை (வியாழக்கிழமை) முதல் 10.8.2022 வரை 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ளன. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவை மாவட்டத்தில் இருந்து தர்மபுரி மாவட்டத்திற்கு வரப்பெற்ற செஸ் ஒலிம்பியாட் ஜோதியை தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் சாந்தி பெற்றுக்கொண்டார். பின்னர் அந்த ஜோதியை தர்மபுரி மாவட்ட தடகள வீரர் வீரமணியிடம் வழங்கினார்.

தர்மபுரி அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் 200- க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற மாதிரி செஸ் ஒலிம்பியாட் ஜோதி தொடர் ஓட்டத்தை கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த மாதிரி செஸ் ஒலிம்பியாட் ஜோதி தொடர் ஓட்டம் இலக்கியம்பட்டி, செந்தில்நகர், பாரதிபுரம், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வழியாக தர்மபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தை சென்றடைந்தது. அங்கு உதவி கலெக்டர் சித்ரா விஜயன் ஜோதியை பெற்றுக்கொண்டார்.

பரிசு-சான்றிதழ்

இதைத்தொடர்ந்த மாதிரி கேஸ் ஒலிம்பியாட் ஜோதி குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார். வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் யசோதா மதிவாணன், நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாபு வரவேற்று பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் கலை நிகழ்ச்சிகள், மல்லர் கம்பம், சிலம்பம் உள்ளிட்ட வீர விளையாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து செஸ் ஒலிபியாட் போட்டியில் பங்கேற்க இருக்கும் 108 நாடுகளின் பெயர்கள் கொண்ட பதாகைகளை மாணவ, மாணவிகள் அணிவகுத்து எடுத்து சென்றனர். தொடர்ந்து வண்ண வண்ண பலூன்கள் பறக்க விடப்பட்டு 108 மரக்கன்றுகள் நடப்பட்டது. இதைத் தொடர்ந்து மாவட்ட அளவில் நடைபெற்ற செஸ் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் சாந்தி பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அண்ணாமலை, முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன், தாசில்தார் ராஜராஜன், நகராட்சி ஆணையாளர் சித்ரா சுகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் கணேசன், நகராட்சி பொறியாளர் ஜெயசீலன், அரசு கலைக்கல்லூரி முதல்வர் கிள்ளிவளவன், உடற்கல்வி இயக்குனர் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி நன்றி கூறினார்.


Next Story