தர்மபுரி அதியமான் அரசு பள்ளியில் செஸ் போட்டி
தர்மபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சரக அளவிலான செஸ் போட்டி நடைபெற்றது. இதில் 43 அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினர். இந்த போட்டியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முத்துக்குமார், பள்ளி தலைமை ஆசிரியர் தங்கவேல், உதவி தலைமை ஆசிரியர் முருகன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மான்விழி பரிசு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இந்த போட்டிகளில் முதலிடம் பிடித்த மாணவ, மாணவிகள் மாவட்ட அளவில் நடைபெறும் செஸ் போட்டயில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.